சென்னை: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26ஆம் தேதி திகார் சிறையில் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி அமலாக்கத்துறை தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி, ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.