2024ம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் பலவிதமான அனுபவங்களை கொடுத்த ஆண்டாக இருக்கலாம். ஒரு சிலருக்கு நல்ல அனுபவங்களையும், சிலருக்கு கடினமான பாடங்களையும், பலருக்கு எப்போதும் போல கடந்து போன ஆண்டாக கூட இருக்கலாம். இவை அனைத்தும் புது ஆண்டிற்கான தொடக்கமாகவும் அமையலாம். அப்படி, புது வருடம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பலரும் எப்படி புது வருடத்தை தொடங்க வேண்டும் என யோசித்து கொண்டிருப்போம்.
நம் வாழ்வில் ஒவ்வொரு புதிய தொடக்கத்திற்கு பின்னாலும், ஒரு உறுதிமொழி இருப்பது நிச்சயம். இந்நிலையில், புது வருடத்தை தொடங்குவதற்கு என்ன மாதிரியான உறுதிமொழி, தீர்மானங்கள் எடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
சேமிப்பு: வரும் ஆண்டில், உங்கள் வரவு செலவுகளை எப்படி கையாள்வது என்பதை, இந்த வருடத்தின் இறுதி நாட்களில் திட்டமிடுவது சிறந்த தொடக்கமாக இருக்கும். என்ன தேவை? எதில் சேமிக்கலாம்? எவ்வளவு சேமிக்க வேண்டும்? சிக்கனமாக இருக்க வழி என்ன என்பதை தெளிவாக முடிவு எடுங்கள். மேலும், தினசரி செலவுகளை குறித்து வைப்பது, தேவையற்ற செலவுகளை எப்படி குறைப்பது என முடிவு செய்து 2025ம் ஆண்டை சிக்கனத்துடன் ஆரம்பியுங்கள்.
கெட்ட பழக்கங்களை கைவிடலாம்: நம்மை வளர விடாமல், ஒரே இடத்தில் தேங்கி நிற்க வைக்கும் கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பது நமக்கு நன்றாக தெரியும். இந்நிலையில், நீங்கள் மாற்ற நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் கெட்ட பழக்கங்களை கைவிடுவது உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் செய்யும் முதலீடாக அமையும். அது, உணவு, மது, புகை, நண்பர், என என்னவாக இருந்தாலும் கெட்டது என்றால் கைவிட்டு கைவீசி நடை போட தொடங்குங்கள்.
தூக்கம்: அனைத்திற்கும் அத்தியவசியமாகவும், அடிப்படையாக இருக்கும் தூக்கத்திற்கு இந்தாண்டு முன்னுரிமை கொடுத்து பாருங்கள். தினசரி 8 மணி நேர நிம்மதியான தூக்கத்தை பெற முயற்சி செய்யுங்கள். மேலும், தூங்குவதற்கு அரை முதல் 1 மணி நேரத்திற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
புது பழக்கம்: புத்தாண்டை புது பழக்கங்களுடன் தொடங்குவது மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து நல்ல மாற்றத்தை தரும். புத்தகம் வாசிப்பு, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வரலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வர, எளிமையாகி விடும். ட்ரை பண்ணி பாருங்களேன்.
டைரி எழுதுங்கள்: நமது அன்றாட நிகழ்வுகளை கைப்பட டைரியில் எழுதுவது பல நற்குணங்களுக்கு வழிவகுக்கும். நாம் கைப்பட எழுதும் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் வீரியம் அதிகம். உங்களது ஆசை, கனவு என அனைத்தையும் எழுதி வையுங்கள். அவை தினமும் உங்கள் கண்ணில் படும் போது நீங்கள் நினைத்தது கட்டாயம் நிறைவேறும். தினசரி நிகழ்வு, மனதை பாதித்த சம்பவங்களை மீண்டும் திரும்பி பார்கும் போது, நீங்கள் வடித்த கண்ணீர் கூட பயனற்றது என புரியலாம். நமக்கு நாமே எடுக்கும் பாடமாக இந்த பழக்கம் இருக்கும்.
குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்: அனைத்தும் எளிமையாக மாறிப்போன இந்த வாழ்கையில் கடினமாக இருப்பது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதே. அன்புகுரியவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என இந்தாண்டு தீர்மானம் எடுங்கள். இளமையும், நேரமும் திரும்பி வராது என்பதால் இருக்கும் நேரத்தை முழுமையாக பயன்படுத்துங்கள்.
நிகழ்காலத்தில் இருங்கள்: கடந்த காலத்தில் நடந்ததையும், வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை மனத்திற்குள் போட்டு குழப்பாமல் நிகழ்காலத்தில் நம்மளிடம் என்ன இருக்கிறது என்பதை புரிந்து செயல்படுங்கள். இப்போது இருக்கும் நாட்களை தவறவிட்டால், பிற்காலத்தில் இந்த நாட்களை நினைத்து கவலைப்பட வேண்டி இருக்கும். மனதை போட்டு குழப்பாமல், அனைத்தையும் புன்னகையுடனும், தைரியத்துடனும் வரவேறுங்கள். செதுக்க செதுக்க கல் சிற்பமாக தான் மாறும் என்பதை நினைவில் வையுங்கள்.