புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கரை அவமதித்திருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை சமூகங்களை அவமானப்படுத்தவும் சாத்தியமான எல்லா மோசமான தந்திரங்களிலும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்,"என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "காங்கிரஸும் அதன் அழுகிய சுற்றுச்சூழலும் தீங்கிழைக்கும் பொய்களையும் அவர்கள் நினைத்தால், பல ஆண்டுகால தவறான செயல்களையும் மறைக்க முடியும். குறிப்பாக அம்பேத்கரை அவர்கள் அவமதித்தனர். அவர்கள் பெரும் தவறு இழைப்பதில் தீவிரமாக உள்ளனர்.
இதையும் படிங்க: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது என்ன? மன்னிப்புக்கேட்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமளி!
அவரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது. பண்டிட் நேரு அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரது தோல்வியை கவுரவ பிரச்சினையாக ஆக்கினார். அவருக்கு பாரத ரத்னா மறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் பெருமைக்குரிய இடத்தில் இடம் பெறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை.
ஒரு வம்சத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி இருக்கிறது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள் டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை சமூகங்களை அவமானப்படுத்தவும் சாத்தியமான எல்லா மோசமான தந்திரங்களிலும் ஈடுபட்டுள்ளது,அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை அமித்ஷா அம்பலப்படுத்தினார்,"என்று கூறியுள்ளார்.
அம்பேத்கருக்கு நாங்கள் என்ன செய்தோம்: மேலும் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "கடந்த பத்து ஆண்டுகளாக பாபாசாகேப் அம்பேத்கரின் கண்ணோட்டத்தை நிறைவேற்ற ஓய்வின்றி பாஜக அரசு உழைத்து வருகிறது. 25 கோடி மக்களை பசியில் இருந்து மீட்டது, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சட்டத்தை வலுப்படுத்தியது, பாஜக அரசின் தூய்மை இந்தியா, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் இயக்கம், உஜ்வாலா யோஜனா உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த ஒவ்வொரு திட்டங்களும் ஏழைகளின் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வாதாரத்துக்கு உதவிகரமாக இருக்கின்றன.
அம்பேத்கர் தொடர்பான பஞ்சதீர்த்தங்களை முன்னெடுக்க பாஜக அரசு பணியாற்றி வருகிறது. கடந்த பல தசாப்தங்களாக சைத்யா பூமியின் நிலம் விவகாரம் நிலுவையில் இருக்கிறது. எங்களது அரசு அந்த பிரச்னையை தீர்த்தது மட்டுமின்றி, நானும் அங்கு பூஜை செய்ய சென்றுள்ளேன்.அம்பேத்கர் தமது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் வசித்த டெல்லி அலிப்பூர் சாலையில் உள்ள வீடு நினைவகமாக முன்னெடுக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். அதே போல லண்டனில் அவர் வசித்த இல்லத்தையும் மத்திய அரசு வாங்கி உள்ளது. அம்பேத்கர் என்று வரும்போது, நாங்கள் முழுமையான மரியாதை அளிக்கின்றோம்,"என்று தெரிவித்துள்ளார்.