சென்னை:சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான குடோனில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று (மார்ச் 14) சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று இரவு முடிவடைந்தது.
இந்நிலையில், குடோனில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சில பொருட்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பையில் போட்டு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த குடோனில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது என்பது குறித்தான விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் டெல்லியில் வைத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.