தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'துரோகிகள் நிறைய உள்ளனர்'.. 2026 தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. ஆலோசனை கூட்டத்தில் ஈபிஎஸ் முடிவென்ன? - edappadi Palaniswami - EDAPPADI PALANISWAMI

admk election discussion: 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் எனவும், பாஜகவுடன் தேர்தலில் கூட்டணி இல்லை எனவும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 12:27 PM IST

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று (ஜூலை 10) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், குறிப்பாக, காஞ்சிபுரம் மற்றும் ஶ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற தொகுதி முடிவுகள் குறித்து ஆலோசனை நடந்தது.

அந்த கூட்டத்தில் தொகுதியின் வேட்பாளர், மாவட்ட செயலாளர், தொகுதி பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

அரசின் திட்டங்களுக்கு வரவேற்பு: கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், கூட்டணி பலமாக இல்லாதது தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என கூறியதாகவும், மேலும், அரசின் மகளிர் உரிமை தொகை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மக்களிடையே சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அணி இணைப்பு: மேலும், 2026 ஆம் ஆண்டு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சசிகலா, ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றினைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில், நிர்வாகிகள் பலர் புதிதாக யாரையும் சேர்த்துவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

துரோகிகள் நிறைய உள்ளனர்: கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''யாரையும் குறை சொல்ல இங்கே அழைக்கவில்லை என்றும் எதிரிகள், துரோகிகள் நிறைய உள்ளனர். அவர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது'' என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எங்கெங்கே பிரச்சனை இருக்கிறதோ அங்கே சரி செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்திய எடப்பாடி பழனிசாமி, கட்சியை வலுப்படுத்த மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், 2026 தேர்தலில் வெற்றியை நோக்கி பணியாற்ற வேண்டும் என கூறியதாக அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

2026 தேர்தல்: அதே சமயம், எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் எனவும், 2026 இல் பாஜக உடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம். மேலும், நேற்று காஞ்சிபுரம் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளிடம் தனி தனியே 2 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளுடனும், 12 ஆம் தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி நிர்வாகிகளுடனும், 13 ஆம் தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் நிர்வாகிகளுடனும், 15 ஆம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி நிர்வாகிகளுடனும், 16 ஆம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் நிர்வாகிகளுடனும், 17ம் தேதி தென்காசி, தேனி, திண்டுக்கல் நிர்வாகிகளுடனும், 18 ஆம் தேதி பொள்ளாச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் நிர்வாகிகளுடனும், 19ம் தேதி விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:கருணாநிதி குறித்து அவதூறு; குற்றாலத்தில் சாட்டை துரைமுருகன் கைது - பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details