சென்னை:இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சமீபத்தில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி இருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பலதரப்பிலிருந்தும் வரவேற்பு வந்தது. இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வேளாண் அறிவியல் அகாடமி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) இணைந்து எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடினர். நேற்று (பிப்.13) டெல்லியில் நடந்த இந்த நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், “இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. எனது தந்தை, மற்றும் தாய் தேசிய வேளாண் அறிவியல் அகாடமி மாணவர்களுக்கு ஒரு பெற்றோர் உடன் இருந்த உணர்வை அளித்திருப்பார்கள். எனது சிறுவயது குறித்து எனக்கு ஞாபகம் வருவதெல்லாம், எங்கள் வீடு எப்பொழுதும் மாணவர்களால் நிறைந்திருந்தது. எனது தந்தை மரபியல் குழுவிற்குத் இயக்குநராக இருந்த போதிலும், காலையிலும் மாலையிலும் வீட்டில் மாணவர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
என் வீட்டில் பல வெளிநாட்டு மாணவர்களும் எனது தந்தையைச் சந்தித்தனர். நாங்கள் பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடினோம். தேசிய வேளாண் அறிவியல் அகாடமி ஒரு கூட்டுக்குடும்பம் போல இருந்தது. எனது தந்தை விவசாயத்திற்காகவும், விவசாயிகள் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவில் இன்னும் மக்கள் பலரும் பொருளாதாரம், ஊட்டச்சத்து, ஆரோக்கியம், பாதுகாப்பு போன்றவற்றில் இக்கட்டான நிலையில் உள்ளனர். அதில் துரதிர்ஷ்டமாக விவசாயிகளும் அவர்களின் குடும்பத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காத நிலையில் உள்ளனர். நமக்கான உணவை விளைவிப்பவர்களே ஆரோக்கியமான, வளமான வாழ்க்கை வாழவில்லை.
பஞ்சத்தைப் பற்றி அதிகம் பேசியவர்களில் எனது தந்தையும் ஒருவர் என்று நினைக்கிறேன். இங்கு அனைவரும் கூறியது போல் அவர் எதிர்காலம் குறித்த தீர்க்கமான சிந்தனை கொண்டவராக இருந்தார். நான் ஒரு மருத்துவ விஞ்ஞானி. நாங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பிரச்சினை குறித்தே சிந்தித்தோம்.