தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தேனி அணைகளின் நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி! - dam water level increase - DAM WATER LEVEL INCREASE

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணையின் புகைப்படம்
சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணையின் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 12:38 PM IST

சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணையின் வீடியோ (credits-ETV Bharat Tamil Nadu)

தேனி:பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கும் உள்ள சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பொழிவு இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் அணைக்கு நீர்வரத்து வர துவங்கி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது.

தேனி மாவட்டத்திற்கு நேற்று (மே 17) ஆரஞ்சு அலர்ட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படியே பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

இந்த கனமழையால் இரண்டு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் ஒரே நாளில் 115.12 அடியில் இருந்த நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 120.37 அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் அணையின் நீர்மட்டம் 44 அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 46 அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அணைகளின் நிலவரங்கள் :

சோத்துப்பாறை அணை: 120.37 (126.28)அடி

நீர்வரத்து : 100 கன அடிநீர்

வெளியேற்றம் : 3 கன அடிநீர்

இருப்பு : 90.30 மில்லியன் கன அடி

மழை அளவு 2.3 சென்டிமீட்டர்

மஞ்சளார் அணை: 46 (57)அடி

நீர்வரத்து : 302 கன அடிநீர்

வெளியேற்றம் இல்லை

அணையில் நீர் இருப்பு : 271.12 மில்லியன் கன அடி

மழை அளவு :8.5 சென்டிமீட்டர் பதிவு

இதையும் படிங்க:குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நெல்லை சிறுவன் சடலமாக மீட்பு - Tenkasi Courtallam Flood

ABOUT THE AUTHOR

...view details