ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள பெருமாள்மடை கிராமத்தில் வசித்து வருபவர் 85 வயதான முதியவர் உலகன். இவருடைய மகன் மணிமாறன் அப்பகுதியில் ரவுடியாக உள்ளதாகவும், இவர் மீது ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மணிமாறன் அடிக்கடி தனது தந்தை உலகனிடம் பூர்வீகச் சொத்துக்களை எழுதித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், மதுபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்தல், சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டி முதியவர் எழுதிக் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை அரிவாளால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.