கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி அடுத்து அமைந்துள்ள ஆழியார் கவியருவி, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கவியருவியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் ஆழியார் கவியருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து உள்ளதால், வனத்துறை சார்பில் கவியருவியை மூட உத்தரவிடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாமல் முற்றிலும் பாறைகளாகக் காட்சியளிக்கும் கவியருவியின் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu) ஆழியார் கவியருவி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள இத்தகையச் சூழலில், இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும், அருவியில் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் பாறைகளாகக் காட்சியளிக்கிறது.
இதுமட்டுமல்லாது, ஆழியார் கவியருவியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஏராளமான குரங்குகள் தங்களுடைய வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் நிலவும் வறட்சியால் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை காரணமாக, சாலையோரம் உணவுகளை குரங்குகள் தேடிச் செல்கிறது.
இதனால் இந்த பகுதி வழியாக வால்பாறைக்குச் செல்லக்கூடிய வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், தற்போது பெய்துள்ள கோடை மழையின் காரணமாக, வால்பாறை கவர்கல் பகுதியின் சீதோஷ்ன நிலை பனிமூட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் ஆழியார் கவியருவிக்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை செல்கின்றனர். ஆகவே, ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களில் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்தியது போல, வால்பாறையிலும் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், வால்பாறை சோலையார் டேம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் உள்ளது. இருந்தபோதிலும், தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை நோக்கி வருவதால், போதிய இட வசதி இல்லாமல் நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆகவே தமிழ்நாடு அரசு, உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் நலன் கருதி, இ-பாஸ் முறையை வால்பாறையில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:தலைகீழாக மாறும் வானிலை.. தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையத் தொடங்கிய வெப்பம்!