தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஞ்சோலை விவகாரம்; காப்புக்காடாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரி மனு! - MANJOLAI ISSUE

நெல்லை மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட 5 தேயிலைத் தோட்டப் பகுதிகளை காப்புக்காடாக அறிவித்ததை ரத்து செய்யக் கோரி சமூக ஆர்வலர் முத்துராமன் மனு அளித்துள்ளார்.

மாஞ்சோலை  reserve forest issue  காப்புக்காடு  Manjolai tea estate issue
மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 1:44 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் சுற்றுப்புறச்சூழல், வனத்துறை அமைச்சகம், தமிழக அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் பேரூராட்சிகள் இயக்குனர் ஆகியோருக்கு நெல்லை மாவட்ட வனம் மற்றும் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் முத்துராமன் மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், "மணிமுத்தாறு பகுதி 1963 முதல் 1994ஆம் ஆண்டு வரை நகரியம் என்பதாக தொழில் பகுதி வகைப்பாட்டில் இருந்தது. பின்னர், 1994ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியாக நகர்ப்புற வகைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மணிமுத்தாறு பேரூராட்சி வார்டு எண்கள் 9, 10, 11, 12, 13 ஆகிய பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை தேயிலைத்தோட்ட பகுதிகளும் காப்புக் காடுகளாக வகைப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் சிறப்பு நிலை பேரூராட்சியாகவும், மறுபுறம் காப்புக்காடுகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியின் 5 வார்டுகளை, நகர்ப்புற பகுதி என அறிவிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு முதல் காப்புக்காடாக 5 அறிவிக்கப்பட்டது சட்டவிரோதம். எனவே, இந்த 5 வார்டு பகுதிகளை காப்புக்காடாக அறிவிப்பு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாஞ்சோலை விவகாரம்; திருநெல்வேலியில் தொடரும் மனித உரிமைகள் ஆணைய விசாரணை!

ஏற்கனவே தேயிலை தோட்டப் பகுதிகள் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டதால், அங்கு செயல்பட்டு வந்த தேயிலை தோட்ட நிறுவனம் அதற்கான குத்தகை காலம் முடிவடைவதற்குள் தனது செயல்பாட்டினை நிறுத்திக் கொண்டது. தற்போது அங்கே தேயிலை உற்பத்தி நடைபெறவில்லை. பிபிடிசி எனப்படும் தனியார் நிறுவனம் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தேயிலை பயிரிட்டு வந்த நிலையில், 2028 ஆம் ஆண்டுடன் முன்னாள் சிங்கப்பட்டி ஜமீனுடன் பிபிடிசி நிறுவனம் போட்டு கொண்ட ஒப்பந்தம் முடிவடைகிறது.

எனவே முன்கூட்டியே அந்நிறுவனம் காலி செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கடந்த மூன்று மாதத்திற்கு மேல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர். மேலும், அவர்களை அங்கிருந்து காலி செய்ய பிபிடிசி நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற நடவடிக்கையால் தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கேயே வேலை இல்லாமல் வசிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர் மனு கொடுத்திருப்பது தொழிலாளர்களுக்குமே ஆறுதலை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details