தேனி: தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் அருகே வசித்து வருபவர் நவீனா என்பவரின் ஆறு வயது மகன் திரினேஷ் (6). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு சிறு வயது முதலே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்துள்ளது.
சாதனை படைத்த சிறுவன் (Credits - ETV Bharat Tamil Nadu) சிகிச்சைக்காக மருத்துவரை அனுகிய போது, நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, சிறுவன் திரினேஷ் நீச்சல் பயிற்சி மேற்கொண்டார். நாளடைவில் நீச்சல் மீது சிறுவனுக்கு ஆர்வம் அதிகரித்ததால், அதில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதற்காக தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட சிறுவன், யுனிவர்சல் ரெக்கார்டு ஃபோரம் என்ற புத்தகத்தில் சாதனை படைக்க முயற்சித்துள்ளார். அந்த வகையில், தேனி விளையாட்டு மைதானம் அருகே உள்ள நீச்சல் குளத்தில் 7 ஆயிரத்து 500 மீட்டர் தூரத்தை தொடர்ந்து நீந்தி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
நீச்சல் குளத்தை ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை 150 முறை (7.5 கி.மீ) தூரத்தை 3 மணி நேரம் 15 நிமிடத்தில் தொடர்ந்து நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்துள்ளார். சிறுவனின் இந்த சாதனை ஆசியா யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரம் புத்தகத்தில் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுவனுக்கு சாதனைக்கான பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இது குறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், "எனது மகன் நீச்சல் மீதுள்ள ஆர்வத்தாலும் அவனது கடின உழைப்பாலும் இந்த சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி" எனக் கூறினார்.
தொடர்ந்து சிறுவன் திரினேஷின் நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் கூறுகையில், "என்னுடைய மாணவர்களுள் ஒருவரான 6 வயது சிறுவர் திரினேஷ், 3 மணி நேரம் 15 நிமிடத்தில் 7.5 கிமீ தொடர்ந்து நீச்சல் அடித்து ஆசிய அளவிலான சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
குறிப்பாக, இந்த சாதனைக்காக கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இச்சிறுவன் தனது சாதனை மூலம் தேனிக்கும், தமிழகத்திற்கு இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்" எனக் கூறினார். சிறு வயதில் மூச்சுத் திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிறுவன், ஆசிய அளவிலான சாதனை படைத்துள்ளது அனைவரின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:மீண்டும் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. ரேஸ் பிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!