மதுரை:சிவகங்கையில் 'சிவகங்கை தொல்நடைக் குழு' என்னும் பெயரில் தொல்லியல் ஆர்வலர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது தொல்லியல் எச்சங்களை பாதுகாத்தல், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பள்ளி கல்லூரிகளில் தொல்லியல் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது.
மேலும், புதிய கல்வெட்டுகள், தொல்லியல் எச்சங்களை கண்டறிந்து அவற்றை வெளிப்படுத்துதல் மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற பணிகளோடு, பொதுமக்களையும், மாணவர்களையும் தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு களப்பயணமாக அழைத்துச் சென்றும் வருகிறது. இந்த நிலையில், சிவகங்கை தொல்நடைக் குழுவின் 7ஆவது தொல்நடைப் பயணத்தில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொல்லியல் தளங்களுக்கு நேற்று (டிசம்பர் 31) செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, மதுரை மாவட்டம் திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்த இல்லம், திருமறைநாதர் உடனுறை வேதவல்லி திருத்தலம், ஆவுடையார் கோவில் கலைப் பாணியில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு சிவனாரின் கால் கொலுசு ஒலி கேட்ட இடமாக நம்பப்படும் நூற்றுக்கால் மண்டபம், மாணிக்கவாசகர் சன்னதி ஆகியவற்றைப் பார்வையிட்டுள்ளனர்.
திருவாதவூர் ஓவா மலை தமிழிக் கல்வெட்டு:
திருவாதவூர் ஓவா மலையில் கி.மு இரண்டாம் நூற்றாண்டு தமிழிக் கல்வெட்டு, "பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்" என்னும் முதல் கல்வெட்டு, குகை தலத்தின் புருவத்தில் நீர்வடியும் விளிம்பின் மேல் பகுதியில் உள்ளது. மற்றொன்று "உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்" என்ற கல்வெட்டு, புருவத்தின் கீழ் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. இவற்றையும், நான்காயிரம் ஆண்டுகள் பழமையான செஞ்சாந்து சுருள் வட்ட ஓவியங்கள், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணப் படுக்கைகள் ஆகியவற்றைக் கண்டு களித்துள்ளனர்.
லாடன் கோயில்:
மதுரை யானை மலையில் முருகனுக்காக எடுக்கப்பட்டுள்ள தனிக் குடைவரையான லாடன் கோயில் மற்றும் அங்குள்ள எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து, 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் சமணர்கள் தங்களது இறைப்பணியோடு மக்கள் பணியையும் செய்ததற்கான அடையாளங்களில் ஒன்றாக, யானைமலையில் மருந்து அரைக்கும் குழியுடன் அமைந்துள்ள சமணப் பள்ளி, அங்கு பாறையின் மேற்பகுதியில் அமைந்துள்ள மகாவீரர் சிற்பங்கள், பாகுபலி சிற்பம், பார்சுவத நாதர், பத்மாவதி தாயார் உள்ளிட்ட இயக்கி சிற்பங்களையும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.