சென்னை:தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, யெச்சூரியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “சீதாராம் யெச்சூரியின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது நான் அமெரிக்காவிலிருந்து உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன்.
எப்படியாவது அவர் உடல் நலம் பெற்று திரும்பி விடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நம்மை வருத்தம் அடைய வைக்கும் வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். நான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகு சீத்தாராம் யெச்சூரி படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன்.
அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, எங்களுக்கும் சொந்தம், நம் அனைவருக்கும் சொந்தம் என்று கூறினார். இந்தியாவில் கருத்தியலின் அடையாளமாக ஒருவர் இருக்கிறார் என்றால், நிச்சயமாக அவரை தான் நம் குறிப்பிட வேண்டும். அவர் எழுத்து என்பது கருத்துகளுக்கான இடமாக அமைந்துவிட்டது.
யெச்சூரி குறித்து சிந்திக்கும்போது, கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு தான் என் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் எனக்கும் ஒரு பங்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டு பேசினார். 2015ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்ட போது, நம் முன்பு உள்ள முக்கியமான பணி இடதுசாரிகளையும் ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பதுதான் என்று பேசினார்.
என் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார். சீத்தாராம் யெச்சூரியின் எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் இருப்பார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவர் அவர். மேலும், அந்தப் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி கோட்டையாக மாற்றியவர்.
யெச்சூரி இளைய சமூகத்தின் வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார். இடதுசாரி சித்தாந்தத்தை இறுதி மூச்சு வரை கடைபிடித்த ஜனநாயகவாதியாக இருந்தார். இந்தியா கூட்டணியை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர் என தெரிவித்த முதலமைச்சர், கூட்டணி கட்சிகளுக்குள் முரண்பாடு இருந்தாலும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என உறுதியோடு இருந்தவர் யெச்சூரி என குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணி இந்த அளவுக்கு வெற்றி பெற முக்கியமான தலைவர்களில் அவரும் ஒருவர். சீத்தாராம் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் நாம் தொடர வேண்டும். இடதுசாரி இயக்கத் தலைவர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவர் நினைத்த மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும். சமூக நீதி இந்தியாவை உருவாக்க வேண்டும், இவை அடங்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கண்ணப்பர் திடல் மக்களின் 22 ஆண்டுகால கனவை நனவாக்கிய தமிழக அரசு! பயனாளிகள் நெகிழ்ச்சி