திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆண் நண்பர்களைக் கட்டிப்போட்டு விட்டு 19 மற்றும் 17 வயதுடைய அக்கா, தங்கையைக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் துன்புறுதல் செய்த 3 பேரை சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தப்பி ஓடிய இளைஞரைத் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், 19 மற்றும் 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவரும் தங்களது ஆண் நண்பர்களுடன் கடந்த மார்ச் 30ஆம் தேதி இடையகோட்டையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர்.
மீண்டும் வீடு திரும்பிய போது அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் 21, முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் 26, முருகபவனத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் 22 ஆகிய 3 பேரும் அந்த சிறுமிகளிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் என கேட்டுள்ளனர். ஓட்டலில் சாப்பிட்ட பில் தொகையைக் கொடுத்து விட்டு வெளியே வந்த ஆண் நண்பர்கள், தங்களுடன் வந்ததாகக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆண் நண்பர்கள் 2 பேரையும் ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு, சிறுமிகள் 2 பேரையும் மற்றொரு பைக்கில் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வந்தவுடன் ஆண் நண்பர்கள் இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டு. அந்த இடத்துக்குப் பிரசன்ன குமார் என்ற மற்றொரு நபர் வர 4 பேரும் சேர்ந்து 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.