தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு; தமிழகத்தில் அமித் ஷாவை கண்டித்து வெடித்த போராட்டம்..! - TAMIL NADU PROTEST

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தமிழகம் முழுக்க திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமித் ஷாவை கண்டித்து திமுக, விசிகவினர் போராட்டம்
அமித் ஷாவை கண்டித்து திமுக, விசிகவினர் போராட்டம் (Etv Bharatcredit - ETV Bharat Tamil Nadu, @thirumaofficial x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

Updated : 2 hours ago

சென்னை:ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமித் ஷா தனது வார்த்தையை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி எம்பி-க்கள் நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் குதித்தனர்.

இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு அமித்ஷாவின் கருத்தை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், ஆளுங்கட்சி எம்பிக்கள் உடன் எதிர் கட்சி எம்பிக்கள் மோதல் ஏற்பட்டு பரபரப்பானது.

இந்த சூழலில், இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல, விசிகவினரும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அம்பேத்கரை நாடாளுமன்ற அவையில் அவமதிப்பு செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி, திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் நுழைந்த விசிகவினர் பெங்களூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய லால்பாக் விரைவு ரயிலை மறிக்க முயன்று, காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஓம் பிரகாசம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விசிகவினர் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திமுகவினர் மயிலாடுதுறை, தஞ்சை, மதுரை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், '' மரியாதையாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். ஜனநாயகத்தின் மீது பிரதமர் மோடிக்கு நம்பிக்கை இருந்தால் அமித்ஷாவை 6 மாதத்திற்காவது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்'' என கூறினார்.

உருவபொம்மை எரிப்பு

அம்பேத்கரை அவதூறாக பேசிய விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி அமித்ஷாவின் உருவ படத்தை கிழித்தும், காலால் மிதித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர். புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். சாலை மறியல் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூரில் அமித் ஷாவின் படம் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

அமித் ஷாவை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி சந்திரன் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அமித் ஷாவின் படத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தும், செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பானது.

Last Updated : 2 hours ago

ABOUT THE AUTHOR

...view details