விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல், தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணி மருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறை வெடித்து சிதறியது. அறையில் வேலை பார்த்த மாரியப்பன், முத்துவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சரோஜா, சங்கரவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் வருவாய்த்துறை, போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து எம்.புதுபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.