திண்டுக்கல்:பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் நல விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், ஐந்து பள்ளி மாணவிகள் மற்றும் சமையலர் உள்ளிட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி பகுதியில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 22 பெண் மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாணவிகள் உணவு அருந்துவதற்காக காத்திருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பள்ளி மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, சமையலர் அபிராமி (50) என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில், நளினி என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மற்றும் சமையலர் அபிராமி ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே ஆதிதிராவிடர் நல விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஏற்கனவே மேற்கூரை மோசமாக இருந்ததை ஆதிதிராவிடர் நல விடுதி ஊழியர்கள், மாவட்ட கல்வித்துறை இயக்குனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, பழனி கோட்டாட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விடுதியை தற்காலிகமாக பூட்டினர்.
இதையும் படிங்க:இந்தியா வந்து 30 ஆண்டுகளாகிவிட்டது குடியுரிமை வழங்கப்படுமா? - இலங்கைத் தமிழர்கள் கூறுவது என்ன? - Sri Lankan Refugees