தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள விபிவி பாக்கியலட்சுமி நகரில், அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனையை முறைகேடாக கிரய சாசனம் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, கிரய சாசனத்தை ரத்து செய்து அரசே எடுத்துக் கொண்டு நகர் மக்களின் வசதிக்காக அங்கு சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும் என்றும், தவறினால் விரைவில் அறவழியிலான போராட்டங்களை முன்னெடுக்கப்படும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் - மயிலாடுதுறை முக்கிய சாலையில், தேப்பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 1987ஆம் ஆண்டு விபிவி பாக்கியலட்சுமி நகர் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 127 மனைகள் கொண்ட இந்த நகரில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகர் உருவாக்கப்பட்ட போது, 14,400 சதுர அடி காலி மனையை எதிர்காலத்தில் இந்நகர் மக்கள் வசதிக்காக, அரசு சமுதாய கூடம் அமைக்க ஏதுவாக முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே இடம், இந்த நகரினை உருவாக்கிய வி.பி வடிவேல் என்பவராலேயே 1991ஆம் ஆண்டு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த 14,400 சதுர அடி காலி மனை முழுவதும் முரளி ஆனந்த் நிறுவனத்திற்கு கிரய சாசனம் செய்யப்பட்டுள்ளது. பிறகு 2003ஆம் ஆண்டு இந்த காலிமனையை, தேப்பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகம் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த குமரவேலின் தந்தையான கலியமூர்த்தி (காங்) அப்போதைய ஊராட்சி மன்ற தலைவரால், வீட்டுமனை பட்டாக்களாக வகை மாற்றம் செய்த பிறகு, அதனை முரளி ஆனந்த் நிறுவனம் சிலருக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுகுறித்து இந்த நகர்வாசிகளுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தான் தெரியவந்துள்ளது. அன்று முதல் தொடர்ந்து அரசிடம் முறைப்படி உரிய ஆவணங்கள், அரசாணைகளுடன் இந்நகர் மக்களுக்கான சமுதாய கூடம் அமைக்க ஒப்படைக்கப்பட்ட 14,400 சதுர அடி இடத்தினை (இன்றைய மதிப்பில் சுமார் ரூ.3 கோடி) மீண்டும் அரசு கையப்படுத்திட தஞ்சை மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல அரசு உயர் அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.