தூத்துக்குடி: கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்தி நிறுத்தியதாக பஞ்சாயத்து தலைவியின் தூண்டுதலால் ஊர் மக்கள் தங்களை ஊரை விட்டே ஒதுக்கிவைத்து வருவதாகவும், அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு குடும்பம் தங்களது ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவஞானம். இவர் கடந்த முறை நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியுள்ளார்.
அப்போது கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பூத் ஏஜெண்டாக இருந்த சிவஞானம் கள்ள ஓட்டு போடுவது தவறு, போடக்கூடாது என வந்தவர்களை அறிவுரை கூறி தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கள்ள ஓட்டு போட அனுமதிக்காமல் தடுத்ததால், பஞ்சாயத்து தலைவி சுந்தரலட்சுமி அவரது கணவரின் தூண்டுதலின் பேரில் மற்றும் ஊர் கமிட்டியினர் சேர்ந்து சிவஞானம் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய விவசாய நிலங்களுக்கு நீர் வரக்கூடிய வாய்க்கால்களையும் அடைத்து விட்டதாக கூறும் இவர்கள், தங்களது வயல்களில் வேலை செய்வதற்கு கிராம மக்கள் யாரையும் அனுமதிக்காததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகுந்த மன வேதனைக்கு உள்ளதாக கூறுகின்றனர்.