சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் சமீப நாட்களாக திமுக நிர்வாகிகள் மத்தியில் ஓங்கி ஒலித்து வருகிறது. திமுகவைச் சேர்ந்த பல அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுநாள்வரை வெளியாகவில்லை.
உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக விடாமல் தடுப்பது எது? இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உள்ள தயக்கம் என்ன? எதிர்கட்சியினரின் விமர்சனங்கள் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ஷபீரிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது.
இதற்கு பதில் அளித்த அவர், “திமுகவை உதயநிதி ஸ்டாலின் தான் அடுத்து வழிநடத்த போகிறார் என்பதை கட்சி தெளிவுப்படுத்திவிட்டது. உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக உள்ளார், சிறப்பு திட்டங்களையும் கவனித்து வருகிறார். அவர் தயாராக வேண்டும் என்பதற்காக தான் சட்டமன்ற உறுப்பினரான இரண்டு வருடங்களில் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
இதையும் படிங்க:துணை முதல்வர் டூ விஜய் அரசியல்.. இரண்டுக்கும் பளிச்சுனு பதில் சொன்ன உதயநிதி!
முதலமைச்சருக்கு கிடைக்காத வாய்ப்பு உதயநிதிக்கு?: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினரான உடனேயே அமைச்சராகவில்லை. முதலமைச்சருக்கு கிடைக்காத வாய்ப்பு உதயநிதிக்கு மிகவும் எளிமையாக, வேகமாக கிடைக்கவுள்ளது. உதயநிதி துணை முதலமைச்சராக அறிவக்கப்படவில்லை என்றாலும் அவர் முக்கிய அமைச்சராக உள்ளார். உதயநிதியை துணை முதமைச்சராக்க வேண்டும் என்பது திமுகவினரின் விருப்பமாக உள்ளது.
எதிர்வரும் விமர்சனங்கள்:உதயநிதியை துணை முதலமைச்சரானால், அவர் விமர்சனமாக வந்துவிடக்கூடாது என திமுகவினர் நினைக்கின்றனர். அப்பா முதல் முறையாக முதலமைச்சராகி மகனை துணை முதலமைச்சராக்கியுள்ளார். இது தான் திமுக செய்த சாதனை என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வார்கள் என்பதாலும், எதிர்கட்சிகளுக்கு ஒரு விஷயத்தை பேசும்பொருளாக கொடுக்க கூடாது என்பதிலும் திமுகவினர் தெளிவாக உள்ளனர்.
கட்சிக்குள் கருத்து வேறுபாடு: அமைச்சர்கள் பலர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், கட்சிக்குள் இருக்கும் மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்கப்படுகிறதோ என்ற கருத்தும் இருக்கிறது.முதல்வரின் செயல்பாடுகள், சாதனைகள் தான் தேர்தலை தீர்மானிக்கும். உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவது, ஆக்காமல் இருப்பதாலோ அவை தேர்தலை தீர்மானிக்க போவதில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி தான் அடுத்த தேர்லை சந்திக்க போகிறார்கள்.அதனால் துணை முதலமைச்சர் பதவி இப்போது வேண்டாம், விமர்சனங்கள் உருவாகிவிடும் என சிந்தித்து வருகிறார்கள். துணை முதலமைச்சர் குறித்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் பேசிகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், முதலமைச்சரை பொறுத்தவரையில் உதயநிதிக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதை சரிவர செய்யட்டும் பின்னர் பார்க்கலாம் என்பதே நிலைப்பாடாக உள்ளது.