தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதானி - செபி உறவை மத்திய அரசு மறைக்கப் பார்த்தால் அது மேலும் பெரிதாகக் கூடும்" - என்.ராம்! - adani stock market scam - ADANI STOCK MARKET SCAM

Adani Stock Market Scam: அதானி - செபி உறவை மத்திய அரசு மறைக்கப் பார்த்தால் அது மேலும் பெரிதாகக் கூடும் என்றும், செபி தலைவர் பதவி விலக வேண்டும் எனவும் என்.ராம் கூறியுள்ளார்.

என்.ராம்
என்.ராம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 3:53 PM IST

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இந்திய சமூக விஞ்ஞானிக் கழகம் சார்பில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான அதானி குழுமத்திற்கும், செபிக்கும் இடையேயான உறவிற்கு ஒரு சுயேட்சையான விசாரணை வேண்டும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மூத்த பத்திரிகையாளர் என்.ராம், பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அப்போது மேடையில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், "கடந்தாண்டு ஹிண்டன்பர்க் அதானி குழுமம் மற்றும் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள் குறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டது. இந்த வழக்கு விசாரணையை செபி மேற்கொள்ளும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இது திருடன் கையிலே சாவியைக் கொடுத்தது போல அமைந்துவிட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையை செபி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில், ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கையில் செபி தலைவர் மாதபி புச் - அதானி குழுமம் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது. வேலியே பயிரை மேய்ந்தது போல தான் செபி தலைவர் - அதானி குழுமம் முறைகேட்டிற்கு துணை போய் இருப்பது.

அதானி - அம்பானி ஆகியோர் நாட்டின் வளர்ச்சியை உருவாக்கியவர்கள் என பிரதமரும், நிதியமைச்சரும் கூறி வருகின்றனர். அவர்களால் வளர்ச்சி உருவாகவில்லை, வளர்ச்சி மாற்றப்பட்டது. அதானி குழுமம் தொடங்கிய போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த மோடி 15,940 ஏக்கர் நிலத்தை அடி மாட்டு விலைக்கு வழங்கினார்.

கடந்த 10 ஆண்டு காலமாக வாரக்கடன் ரத்து செய்தது ரூ.15 லட்சம் கோடி. கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிச்சலுகை அளித்தது ரூ.2.50 லட்சம் கோடி. இது எல்லாம் வளர்ச்சி மாற்றம் தானே தவிர, வளர்ச்சி உருவாக்கம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் அடி மாட்டு விலைக்கு விற்றுள்ளனர்.

கடந்த 1999ஆம் ஆண்டு அதானி குழுமத்தின் வருமானம் ரூ.2,583 கோடி மட்டுமே. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை 7 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 400 முதல் 500 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர் பட்டியலுக்கு அதானியை மோடி உயர்த்தி உள்ளார்" என்றார்.

பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகையில், "ஹிண்டன்பர்க் விவகாரம் என்பது வெறும் பங்குச்சந்தை தொடர்பான பிரச்னை மட்டுமல்ல. அந்நியச் செலாவணி சம்பந்தப்பட்ட பிரச்னை. ஏன் அதானிக்கு மோடி தலைமையிலான அரசு இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்ற கேள்வி எல்லோருக்கும் வரும்.

அது என்னவென்றால், குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருக்கும்போது ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் கொல்லப்பட்டபோது, அதனை தடுக்காமல் இருந்த ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான முரண். இது தொடர்பாக உலகம் முழுவதும் குரல் எழுப்பப்பட்டன.

இந்த பிரச்னை தொடர்பாக மோடி வெளிநாடுகள் கூட போக முடியாத சூழல் ஏற்பட்டது. மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட சிலருக்கு சார்பாக நடந்து கொள்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டது.

ஆனால் யார் மோசடி செய்தார்களோ, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. அதற்குப் பதிலாக ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதற்கு ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. அதில், செபியின் தலைவருக்கு அதானியின் பங்குச்சந்தைகளின் மீது விருப்பம் இருக்கிறது என்று. செபி என்பது பங்குச்சந்தை தொடர்பான வழிமுறை செய்யக்கூடிய ஒரு அரசாங்க நிறுவனம். அதில் இருக்கக்கூடிய தலைவர் அதானி பங்குகளில் தொடர்பு உடையவர்களாக இருக்கின்றனர். பின்னர் எப்படி சரியான முறையில் விசாரணை நடக்கும்?

ஹிண்டன்பர்க் கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய குற்றச்சம்பவம் நடந்திருக்கிறது, ஆனால் செபி, அதானி நிறுவனத்தின் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, அதானி பங்குச்சந்தை விவகாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, பிளாக் ஸ்டோன் என்ற ரியல் எஸ்டேட் கம்பெனி உதவுகிறது. இது பொதுவெளியில் விவாதிக்கப்படும் இல்லை.

பெரும் முதலாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசே அவர்களைச் சார்ந்திருக்கும் போது என்ன ஆகும் என்பது தான் கேள்வி. ஏதாவது ஒரு பிரச்னை தொடர்பான விவகாரத்தில் சரியான முறையில் விசாரணை செய்து, அதனை செயல்படுத்துங்கள் என்று கூறினாலே இவர்கள் அந்நிய சதி என குறிப்பிட்டு அதிலிருந்து விலகிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இந்திய அரசு பின்பற்றி வரும் வளர்ச்சிப்பாதை என்பது ஒரு சில பெரும் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மையை காவு கொடுக்கும் பாதையாக இருக்கிறது என நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார்.

பின்னர் பேசிய என்.ராம், "உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தவறான விதத்தைக் கையாண்டு உள்ளது. இதைச் சரியான முறையில் கையாண்டு இருந்தால் பெரும் ஊழல் வெளிவந்து இருக்கும். தேர்தல் பத்திரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கவில்லை என்றால் சரியான தீர்ப்பு வழங்கியது. ஆனால், அதற்கு நிகரான இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தோற்றுவிட்டது.

செபி நிலைமை என்னவென்று நாம் அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது. நீதிமன்றத்திற்கு உச்சபட்ச அதிகாரம் இருந்தும், இந்த விவாகரத்தில் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதிலளித்த செபி, இதை ஊழல் என்று சொல்லக்கூடாது எனக் கூறுகிறார்.

செபி 23 குழுவிடம் விசாரணை செய்தது என்றும், இன்னும் ஒரு குழுவிடம் விசாரணை பாக்கி உள்ளது எனக் கூறும் செபி, இந்த விவாகரத்தை முழுவதுமாக மூடி மறைந்து, தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைத்து விட்டது. ஹர்ஷா மேத்தா ஊழலுக்கு பிறகு தான் செபி, அரசின் கட்டுபாட்டில் வந்தது. மத்திய அரசும், நிதித்துறை அமைச்சரும் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை.

செபி தலைவர் மாதபி புச் கணவர் பெயரில் எப்படி பங்குகள் வாங்கப்பட்டது. செபியில் பொறுப்புக்களில் இருப்பவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மாதபி புச் தவறான நடவடிக்கையை மறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்த விவாகரத்தில் இருந்து நாட்டு மக்களை திசைத்திருப்ப பல செயல்களைச் செய்து வருகிறது. மாதபி புச் பொறுப்பினை உடனடியாக பறிக்க வேண்டும்.

மத்திய அரசாங்கம் ஓர் விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து மூடி மறைக்கப் பார்த்தால், இந்த விவகாரம் மேலும் பெரிதாக மாறக்கூடும். செபி தலைவராக மாதபி புச் தொடர்ந்தால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா ஹார்ட்வாட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உண்மை தன்மையை அறியாமல் வெளிப்படுத்திய கருத்து மன அதிருப்தியை ஏற்படுத்துகிறது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :அதானி பங்குச்சந்தை முறைகேடு; சந்தீப் தீக்‌ஷித் முக்கிய வலியுறுத்தல்! - Adani stock market scam

ABOUT THE AUTHOR

...view details