சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் ஆகிய மூவருக்கும் இன்று மத்திய அரசு பாரத ரத்னா அறிவித்துள்ளது. இதேபோல் அமுல் வர்கீஸ் குரியனுக்கும் பாரத ரத்னா அறிவிக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக ஆசிரியர் சங்கர நாராயண் சுடலைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி:மத்திய அரசு மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கருதுகிறீர்கள்? குறிப்பாக தமிழகத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை புரட்சி எற்படுத்தியதற்காக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளராக அவரது பணி குறித்த உங்களின் கருத்து என்ன?
பதில்: எனக்கு பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனை ரொம்ப நன்றாகவே தெரியும். நெருங்கிய பழக்கம் உள்ளது, அடிக்கடி பேசுவோம். அவரது சாதனை மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் மகத்தானது. பரிசுகள் கிடைக்கும் போது அதை அறக்கட்டளைக்கே வழங்கி விடுவார். அது தான் அவரது அர்ப்பணிப்பு மனப்பான்மை. அவர் முதலில் ஐபிஎஸ் தேர்வு எழுதினார். அந்த பக்கம் போய் இருந்தால் பெரிய போலீஸ் அதிகாரியாகி இருப்பார். அவருக்கு அறிவியலில் இருந்த ஆர்வம் காரணமாக மரபணு ஆய்வுகளில் ஈடுபட்டு, ஹாலந்தில் படித்தார்.
அவருக்கு அப்போதைய அமைச்சர் சி.சுப்பிரமணியம் மிகவும் ஆதரவாக இருந்தார். இன்றைக்கு சில பேர் பசுமைப் புரட்சியால் பாதகங்கள் ஏற்பட்டிருப்பதாக பேசலாம், அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். பசுமைப் புரட்சி இல்லை என்றால் பஞ்சமும் பட்டினியும் தான் ஏற்பட்டிருக்கும். பொதுச்சட்டம் 480 (PL 480) படி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டன. அதனால் பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் தெரியத்துவங்கியது.
பின்னர், பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Rice Research Institute) இயக்குநராக இருந்தார். அவருக்கும் வாழும் போதே பாரத் ரத்னா வழங்கி இருக்க வேண்டும். நான் யாருக்கும் வக்காலத்து வாங்க மாட்டேன். எல்லோருக்கும் தெரியும், அவர் இருக்கும் போது அவருக்கு கொடுக்காமல் யார் யாருக்கெல்லாமோ கொடுத்தார்கள். நான் இந்த கட்சியை மட்டும் சொல்லவில்லை. அதேநேரத்தில் மற்றொரு முக்கியமான நபர் டாக்டர் வர்கீஸ் குரியன். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திச் சென்றாரோ, அப்படி வெண்மைப் புரட்சியை முன்னெடுத்து சென்றவர்.
டாக்டர் சுவாமிநாதனுக்கு முதலிலேயே வேளாண்மையில் ஆர்வம் இருந்தது. ஆனால் அமுல் குரியன் என்றழைக்கப்படும் வர்கீஸ் குரியனுக்கு (Verghese Kurien) முதலில் அப்படி ஆர்வம் இல்லை. இஞ்சினியரான வர்கீஸ் குரியன் அமெரிக்காவில் படித்து அங்கே இருந்தவர். ஆனால் அந்த வெண்மைப் புரட்சி நடவடிக்கையில் அவர் மிகப்பெரிய பங்காற்றினார். அதனால் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வு பெரும் மாற்றம் அடைந்தது. அதனால் இந்தியா பால் உற்பத்தியில் மிகை நிலை அடைந்தது. அவருக்கும் நாளைக்கே கூட டுவிட்டரில் பிரதமர் அறிவிக்கலாம்.
அரசியல் தலைவர் பி.வி.நரசிம்ம ராவை எனக்கு நன்றாக தெரியும். அவர் ஆந்திரா அரசியலில் இருக்கும் போதே தெரியும். அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது நன்கு தெரியும். அவர் அறிவுத்திறன் மிக்கவர். அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, அவர் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பெரும் வளர்ச்சி ஏற்பட்டது, அதில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அவருடைய சாதனையை போற்றும் வகையில் அவருக்கு பாரத ரத்னா அறிவித்தது பொருத்தமானது.
சரண் சிங்கும் அது போல தான். அவரைப் பற்றி புத்தகமே உள்ளது. அதைப் படித்தால் அவரது சாதனைகள் தெரியும். இப்போது தேர்தலின் போது ஏன் இவர்களுக்கு விருது கொடுத்தார்கள் என்ற விவகாரத்திற்குள் எல்லாம் நான் போகவில்லை. இவர்களுக்கு பாரத ரத்னா அறிவித்தது ஒரு நல்ல தேர்வு, அதை வரவேற்க வேண்டும்.
இவர்களுக்கு அறிவித்தது மகிழ்ச்சி, டாக்டர் வர்கீஸ் குரியனுக்கும் அறிவித்தால் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமாகும். அது இன்னும் நியாயமான முடிவாக இருக்கும். சுவாமிநாதனும், வர்கீஸ் குரியனும் ஒரே மாதிரியாக பங்காற்றியவர்கள். கூட்டுறவு என்பது அது தான். அவரது வாழ்நாள் முழுவதும் அதை தனியார் மயமாக்க கூடாது என தான் போராடினார். அவருக்கும் அம்ரிதா பட்டேலுக்கும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் உண்டு.