தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கும்பகோணத்தில் நேற்று பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் மேயரான கே.சரவணணை, துணை மேயர் என குறிப்பிட்டார். இது, கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, “இந்த தேர்தல் அரசியல் சட்டத்தை பாதுகாக்க, ஒருங்கிணைந்த இந்தியாவாக தொடர நடைபெறுகிறது. இது சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். இந்த தேர்தலில் ஜனநாயகம் தழைக்க, இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் ஒன்றையும் அவர் நிறைவேற்றவில்லை.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில், 80 சதவீதத்தை கடந்த இரண்டரை ஆண்டுகளில் நிறைவேற்றியதுடன், கொடுக்காத வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றியுள்ளார். மக்களை வஞ்சிப்பவர் மோடி, நேசிப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின். ஆட்சி நடத்துவது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி 3 வருடம் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது மு.க.ஸ்டாலினிடம் பாடம் படிக்க வேண்டும்.
என்ஆர்சி, சிஏஏவிற்கு ஆதரவாக வாக்களித்த பாமகவும், அதிமுகவும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இப்போது தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்கின்றனர்? இவர்கள் இந்திய தேசத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரானவர்கள். பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் நேரடியாக கூட்டணி இல்லாவிட்டாலும், மறைமுகமாக கள்ள உறவு உள்ளது. அதனால் தான் நீ கோவை மற்றும் தஞ்சையை விட்டுக் கொடு, நான் மயிலாடுதுறை மற்றும் திருச்சியை விட்டுக் கொடுக்கிறேன் என்று இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள்” என்றார்.