சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் சந்தித்தனர்.
இவர்களுடன், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, "முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்தித்ததாகவும், இன்னும் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் டெல்லி மற்றும் வட மாநிலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது" தெரிவித்தார்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் பேசிய போது, "நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் 2வது சுதந்திரப் போர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், பாஜகவுக்கு எதிராக ஆயிரம் சதவீதம் வலுவான கருத்துக்களை முதலமைச்சர் எடுத்து வைத்ததால், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தேன். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அப்போதைய தேர்தல் களத்தைப் பொறுத்து முடிவு செய்வோம்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், "தமிழ்நாட்டில் சிறப்பாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் மத்தியில் முதலமைச்சர் எடுத்து வைத்த பிரச்சாரம் சிறப்புமிக்கவை. அரசியல் மாற்றத்திற்கு முதலமைச்சரின் பிரச்சாரம் உதவியாக இருக்கும். நல்ல முடிவைத் தரும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும். தெற்கிலிருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் வரலாறு கருணாநிதியைத் தொடர்ந்து, தற்போது மு.க.ஸ்டாலின் பக்கம் மீண்டும் திரும்பி உள்ளது.
பிரதமர் யார் என்பதை அறிவாலயம் முடிவு செய்யும். பிரதமர் ஆரம்ப காலத்திலிருந்து இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானவர். 2002 போத்ரா ரயில் எரிப்பு சம்பவம், மணிப்பூர் கலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த நாடு எல்லா இன மக்களும் எல்லாரும் ஒன்று கூடி இருக்கக்கூடிய நாடு. 4,898 சமுதாயம் வாழக்கூடிய நாடு, பிரதமரின் பேச்சை யாரும் நம்பப் போவதில்லை. தோல்வி பயத்தின் காரணமாக பிரதமர் இவ்வாறு பேசி வருகிறார்" எனத் தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில், "நாமக்கல் தொகுதியில் களப்பணி சிறப்பாக மேற்கொண்டதால் வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கும். 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும், 2021-ஐ விட தற்போது அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
நாமக்கல் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளார்கள். மேலும், தமிழ்நாட்டின் மாடல் வட மாநிலங்களில் பயன் பெற்று வருவதாகவும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அதனை அறிந்து கொண்டு தான் பிரதமர் மோடி ஒரு ஆதங்கத்தில், தோல்வி பயத்தில் கொச்சையாகப் பேசி வருவதாகவும்” தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராட்சத பம்புகள் மூலம் நீரை வெளியேற்ற எதிர்ப்பு.. சேலம் மேக்னசைட் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! - TN Magnesite Water Issue