சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இன்று பாலமுருகன் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி இதுவரை பேசவில்லை என்று நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியில் பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும், சம்பவத்தால் பெற்றோர்களை இழந்த 45 குழந்தைகளின் படிப்பு செலவை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்றும் அறிவிக்க கூறினார். ஜனநாயகத்தை கடைபிடித்தால் சுரேஷ் என்பவரை தான் தற்காலிக நாடாளுமன்ற தலைவராக பாஜக நியமித்து இருக்க வேண்டும் அல்லது சமூக நீதி என்று கடைப்பிடித்தால் சந்தர்பா என்பவரை தான் நாடாளுமன்ற தலைவராக நியமித்திருக்க வேண்டும். ஆனால் மஹ்தாப் என்பவரை பாஜக அரசு நியமித்துள்ளதன் மூலம் மலிவான அரசியலை செய்து வருகிறது.
நீட் தேர்வில் 1,563 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில், 50 சதவீதம் மாணவர்கள் தேர்வை புறக்கணித்துள்ளனர். இதற்கு காரணம் மத்திய அரசு நடத்தும் தேர்வின் மீது நம்பிக்கை இல்லை என்பது தான். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொணடு வந்த தேர்வு முறைகள் நன்றாக செயல்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி கொண்டு வந்த தேர்வில் முறைகேடு, ஊழல் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறுமா என்ற கேள்விக்கு, சட்டமன்ற உள்ளிட்ட மக்கள் மன்றத்தில் தினந்தோறும் மக்களுக்காக போராடி கொண்டுதான் வருகிறோம். ஓய்வு பெற்ற மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆளும்கட்சி நெருக்கடியால் ஓய்வு பெற்றதாக அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மோகன்ராஜ் என்பவரே வீடியோ பதிவில் தான் மகள் பிரசவத்திற்காக வெளிநாடு செல்வதற்காக தான் விருப்ப ஓய்வு பெற்றேன் என பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிபிஐ விசாரணை வேண்டுமென அண்ணாமலை வேண்டுகோள் குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ மாநிலத்திற்குள் விசாரணை நடத்த இயலாது. இந்த அடிப்படை அரசியல் ஞானம் இல்லாதவராக அண்ணாமலை உள்ளார்.
மலிவான அரசியல் மேற்கொள்வதில் முதன்மையானவர் அண்ணாமலை தான். தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவது அவரவர் உரிமை. எனவே அதற்கான அனுமதி காவல்துறை தான் வழங்க வேண்டும். மேலும், தேவையெனில் இது குறித்து சட்டமன்றத்தில் பேசுவேன் என்று கூறினார்.
இதையும் படிங்க:போதையில் தகராறு செய்த மூத்த மகன் கொலை; அப்பா, இளைய மகன் கைது! - chennai murder