சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார்.
தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது, “இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இன்றைய தலைமுறை, இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது, பிரிட்டிஷ்காரர்களை ஆயுதம் இன்றி காந்தியும், நேருவும், முக்கிய தலைவர்களும் எப்படி விரட்டினார்கள் என நினைவு கூற வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுயிரைக் கொடுத்தவர்கள். இந்த தலைமுறை சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எப்படிப்பட்ட தியாகங்களைச் செய்து இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நேரு மற்றும் காமராஜரை எல்லாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.
ஆனால், இன்று சுதந்திரத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலர் உரிமை கொண்டாடுகிறார்கள். இதையெல்லாம் இந்த தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபோது குண்டூசி தயாரிக்க கூட வாய்ப்பு இல்லை. ஆனால், அதன் பிறகு உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் இந்தியா செயல்பட்டது.
பசி பட்டினியால் இந்தியா அழிந்து போகும் என்று நினைத்தார்கள். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் உலகமே திரும்பி பார்க்கக் கூடிய வகையில், அவர்கள் காலகட்டத்தில் மிகப்பெரிய சிறப்பு பணிகளை செய்தார்கள்.
சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. போலி சித்தாந்தம் என்பது பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் வைத்திருக்கிற சித்தாந்தம். பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன சித்தாந்தம் இருக்கிறது? முதலில் நாம் அனைவரும் இந்த தேசத்தின் மக்கள் என்று சொல்ல முடியுமா? சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ். ஆனால், ஆர்எஸ்எஸ், சங்பரிவார், பாஜகவினர் இன்று சொந்தம் கொண்டாட துடிக்கின்றனர்'' என கூறினார்.
இதையும் படிங்க:நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!