சென்னை:சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது உருவச்சிலை மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது, “வீரர் அழகுமுத்துக்கோன் வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. சுதந்திரப் போராட்ட வீரர்கள், போராட்ட தலைவர்கள் மற்றும் தியாகிகளின் வரலாற்றை மறைப்பதற்கும், மறுப்பதற்கும் ஒரு கூட்டம் உள்ளது. வீரர் அழகுமுத்துக்கோன் புகழை மறைக்க ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது. அதனை ராகுல் காந்தி முறியடிப்பார். இந்த மண்ணில் மனிதர்கள் உள்ளவரை அழகுமுத்துக்கோன் வரலாற்றை மறைக்க முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.