சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் முனையம் ஒன்றிலிருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ், விமான பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் தற்போது பாஸ்ட் டிராப் எனப்படும், Self Baggage Drop (SBD) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.
செல்ப் பேக்கேஜ்ட்ராப் முறை:இதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை, தானியங்கி இயந்திரங்கள் மூலம், தாங்களே ஸ்கேன் செய்து பரிசோதித்து, கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி முனையம் ஒன்றில், பாதுகாப்பு சோதனை கவுண்டர்கள் 60-லிருந்து 63 வரையில், தானியங்கி சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுண்டர்களில், ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இயந்திரங்கள் மட்டும் இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது?: பயணிகள் அந்த இயந்திரத்தில் தங்களுடைய உடைமைகளை வைத்து விட்டு, தங்களின் பயண டிக்கெட், பி.என்.ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக தானியங்கி முறையில், அவர்களுக்கு போர்டிங் பாஸ் வரும். அந்த போர்டிங் பாஸை எடுத்து, அங்குள்ள மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். உடனடியாக அந்த உடைமைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், அந்த இயந்திரத்தின் டிஸ்ப்ளேவில் தெரியும்.
அதைப் பார்த்துவிட்டு, பயணி அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன்கள் மூலம் ஓகே கொடுக்க வேண்டும். அதோடு தான் எடுத்துச் செல்லும் உடைமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும். இதை அடுத்து பயணிகள் உடைமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள், இயந்திரத்தில் இருந்து வரும். பயணி அந்த டேக்குகளை எடுத்து தங்கள் உடைமைகளில் ஒட்டுவதோடு, உடமைகளை அருகே உள்ள கன்வேயர் பெல்டில் வைத்துவிட்டால், பயணியின் உடைமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு தானாகவே கொண்டு செல்லப்படும்.