சென்னை: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கழிவுநீரைக் கலக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். ''தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கர்நாடாகாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்துவிடுவதால் ஆற்றுநீர் முற்றாக நாசமடைந்துள்ளது வேதனையளிக்கிறது. கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத்தவறி, வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அணையில் தேக்கப்படும் பாசனநீரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதிப்பெறுவதோடு ஆற்றுப்படுகையிலுள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவு செய்கிறது. மேலும், அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பருவமழை பொய்த்தது மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து முற்றாக குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் மழைபெய்ய தொடங்கியுள்ள நிலையில் மிகக்குறைவான அளவிலேயே நீர்வரத்து உள்ளது. ஆனால், கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைகள் கரிமக் கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் கலக்கச்செய்வதால் நீரானது முற்றாக மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆற்றுநீரை பாசனத்திற்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த முடியாமல் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.