சென்னை:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த கவலை தருகிறது.
இங்கு புவி வெப்பமயமாதல் என்றால், என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. பருவமழை என்பது இனிமேல் இருக்காது மழை, கனமழை, புயல் மழை என்று தான் இருக்கும் இதை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை என்றால் இப்படி புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும். வரும் காலங்களில் இது போன்ற பேரிடர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
அரசு பணியில் இருக்கும் போது உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம், ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டதற்கு ரூ.5 லட்சம் நிவாரணம், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம். எனவே, இப்போது மதிப்பு மிக்க மரணம் கள்ளச்சாராயம் குடித்து இறப்பது தான். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது என்னையும் அழைத்தார்கள், ஆனால் திமுக என்னை அழைக்க மாட்டார்கள். இவர்களை பொருத்தவரையில் சமத்துவம் சமூகநீதி என்பதெல்லாம் வெறும் பேச்சுதான்.