வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து, வேலூர் மண்டித்தெரு மற்றும் திருப்பத்தூரில் உள்ள ஆம்பூர் புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் மக்களை இந்த அரசு ஒடுக்கத்தான் செய்கிறார்களே தவிர, தீர்வை காணவில்லை. 10 ஆண்டு ஆட்சியில் பாஜக, நாட்டில் ஒரே ஒருவனுக்கு நல்லது செய்ததா என சொல்லுங்க பார்ப்போம். நான் இப்படியே பிறந்த ஊருக்கு சென்று விடுகிறேன், கட்சியை நடத்த மாட்டேன்.
ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டியதாகக் கூறி 20 தமிழர்களை அம்மாநில அரசு சுட்டுக்கொன்ற போது அதிமுகவும், திமுகவும் வேடிக்கை தான் பார்த்தது, வேறு என்ன செய்தது? கர்நாடகாவில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என சொல்லும் கட்சிக்கு 10 சீட்டு கொடுத்து இங்கு தேர்தலைச் சந்திக்கிறது திமுக.
7 விழுக்காடு வாக்கு வைத்திருக்கும் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் நம்மிடத்தில் எவ்வளவு பேரம் பேசினார்கள்? கோடிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். தெருக்கோடியில் நின்றாலும், மக்களுக்கு உண்மையும், நேர்மையுமாகத்தான் நிற்போம் என உங்கள் பிள்ளைகள் வந்து நிற்கின்றோம்.
ஊழலும், லஞ்சமும் புற்று போல் தேசியமயமாக்கப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பதில் இருந்துதான் ஊழல், லஞ்சத்திற்கான விதையே பிறக்கிறது. கோடிகளைக் கொட்டி வென்று வருபவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்களா? இல்லை, நான்கு மடங்கு சம்பாதித்துக்கொள்ள வருவார்களா? வழக்கம்போல எல்லா தேர்தல்களைப் போலவும் இந்த தேர்தலையும் கடந்து போகாதீர்கள், ஆழ்ந்து சிந்தித்து வாக்களியுங்கள்" என்று பேசினார்.
இதன் தொடர்ச்சியாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, "ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டு தடை செய்ய வேண்டும். அப்படி கடுமையான சட்டம் கொண்டுவந்தால்தான், இது போன்ற கொடுமையான செயல்கள் தடுக்கப்படும்.