திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, லால்குடி ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், இன்று (டிச.29) திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறை செய்து, கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
ஆலோசனை கூட்டத்திற்கு முன், சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: '' வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மற்ற கட்சிகள் பல ஆய்வு செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன்'' என்றார்.
பாமக விவகாரம்
பாமக மேடையில் நடந்த காரசார விவாதத்தை குறித்து பதில் அளித்த சீமான், '' பாமக தலைமையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் விரைவில் சரியாகி விடும். அதற்காக அதை குடும்ப அரசியல் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே, தலித் திருமலை உள்ளிட்ட பல்வேறு பேருக்கு பாமக தலைவர் ராமதாஸ் உரிய வாய்ப்புகளை அளித்தார். அது சரிவராத பட்சத்தில் தான் அன்புமணி ராமதாசை வேறு வழியில்லாமல் தேர்ந்தெடுத்தார். இதை என்னிடமே அவர் கூறியிருக்கிறார்'' என தெரிவித்தார்.
குறைத்து மதிப்பிட கூடாது
அண்ணாமலை சாட்டை அடி போராட்டம் குறித்து பேசிய சீமான், '' தமிழ்நாட்டில் திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட கூடாது. எனக்கும் அத்தகைய கோபம் இருக்கிறது. அதற்காக சாட்டையில் அடித்துக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்பவர்களையும், அதற்கு காரணமாணவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும். தேர்தல் தோறும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, உங்களது (அண்ணாமலை) தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசை வலியுறுத்தி, கடுமையான சட்டம் ஒன்றை இயற்ற சொல்லலாம்.
அதாவது, யார் ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுக்கிறாரோ அவர், 10 ஆண்டுகள் தேர்தல் நிற்க தடை, என்ற சட்டத்தை மத்திய அரசை வலியுறுத்தி அண்ணாமலை பெற்று தந்தால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கோ, தேர்தலில் நிற்பதற்கோ யாரும் முன் வர மாட்டார்கள்.
அதனால், ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அடுத்ததாக, இலவசங்களால் மக்களுக்கு ஒருபோதும் நன்மை விளைய போவதில்லை. அதையும் அண்ணாமலை உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்றார்.
திமுக அரசை தோற்கடிக்க முடியாது
தொடர்ந்து பேசிய சீமான், '' தூரல் பயிருக்கு உதவாது. அதுபோல, இலவசங்கள் நாட்டுக்கு உதவாது என குன்றக்குடி அடிகளார் சொன்னது போல இலவசங்கள் கொடுப்பதும் நாட்டுக்கு கேடு. இவை இரண்டையும் கணக்கில் கொள்ளாமல் திமுக அரசை தோற்கடிக்க முடியாது. திமுக அரசு தமிழ்நாட்டில் எந்தவித ஆகச்சிறந்த திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்கவில்லை. மாறாக காலை உணவு திட்டம் என்ற பேரில், வாரத்திற்கு ஐந்து நாட்களும் மாணவர்களுக்கு உப்புமா போடும் அரசாக திமுக அரசு இருக்கிறது. அண்ணா பல்கலை உட்பட, தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் வேலை செய்யாமல் போவதற்கு காரணம் என்ன? ஒருவேளை அதுவும் அரசு ஊழியர்களாக இருக்குமோ?" என்றார்.
மேலும், '' திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சாட்டை துரைமுருகனுக்கும், அவருக்கும் ஏதும் சொத்து தகராறு இருக்கும் போல இருக்கிறது. அதை சாட்டை திருமுருகனே எதிர்கொள்வார்" என்று கிண்டலாக கூறினார்.