சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில், இன்று (ஆக.18) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், நிர்வாகிகளுடன் தென்சென்னை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சீமான் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிகழ்வுக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், 2026 தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது விஜயுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, "நான் நிறைய முறை இதைப் பற்றி பேசிவிட்டேன். தேர்தல் நேரத்தில் தான் அதனைப் பார்க்க வேண்டும். இது குறித்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்" என பதிலளித்தார்.
இதனை அடுத்து, திருச்சி எஸ்.பி வருண் குமார் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "தவறான போலி கணக்குகளை உருவாக்கி அதில் நீங்களே திட்டிக் கொள்கிறீர்கள். என் கட்சியைச் சேர்ந்தவருக்கு இது வேலை கிடையாது. இது போன்ற செயல்களில் ஈடுபட்ட எனது கட்சியைச் சேர்ந்தவரை நான் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறேன்.
துரைமுருகனை நான் இரண்டு முறை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறேன். தளபதியாக இருந்த துரைமுருகனுக்கு அந்த நிலை என்றால், சாதாரண கட்சியினரை வெளியே போ என்று விடுவேன். நீங்கள் என் மீது எழுதுவதை நாங்கள் சகித்துக் கொள்கிறோம். நிறைய வழக்குகளைப் பார்த்து விட்டேன்" என்றார்.
மேலும், கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்காதது, ராஜ்நாத் சிங் பங்கேற்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் சங்கி, பாஜகவின் B டீம் என சொல்கிறீர்கள். தற்பொழுது உங்களை என்னவென்று சொல்வது? பாஜகவுக்கு, திமுக தான் A முதல் Z வரை உள்ள எல்லா டீமும். ஆளுநர் மாளிகையில் கால் வைக்க மாட்டோம் என்றீர்கள். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி நிதி ஆயோக் கூட்டத்திற்குப் போகவில்லை என்றீர்கள்.
ஆனால், உங்கள் அப்பா பெயரில் நூறு ரூபாய் நாணயம் வெளியீடு என்ற உடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறீர்கள். இவ்வளவு தான் உங்கள் கோபமா? ஆளுநரை சலவை செய்து, வெள்ளாவி வைத்து வெளுத்து வாங்கினீர்களா? தற்பொழுது இருப்பதும் அதே ஆளுநர் தானே. இது சந்தர்ப்பவாதம். நூறு ரூபாய் செல்லா காசுக்கு சரண் அடைந்து விட்டீர்கள்.
3 ஆண்டுகளில் ஆயிரம் ரூபாய் கொடுத்ததை தவிர ஆக்கப்பூர்வமான அரசியல் ஏதாவது இருக்கிறதா? இன்று நாணய வெளியீட்டு விழாவில் இவர் அவரை புகழ்வதும், அவர் இவரை புகழ்வதும் நடக்கும். காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் அதற்கு காங்கிரஸ் தலைகுனிய வேண்டும். பாசிசம் என்றார்கள், இன்று அந்த பாசிசம் நாணயத்தை வெளியிடும் பொழுது பல்லை இழிப்பார்கள்" என்று விமர்சித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தப் பக்கம்லாம் போகத் தடை தெரியுமா?