தமிழ்நாடு

tamil nadu

"தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால், ஒழுங்காக இல்லை" - சீமான் குற்றச்சாட்டு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 9:20 PM IST

Seeman Byte: தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால், ஒழுங்காக இல்லை. நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

seeman
சீமான்

சீமான்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி.கிறிஸ்தவ தேவாலயம் அமைந்து உள்ளது இந்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை அலுவலகத்தில் கடந்த 20-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கில் இரணியல் காவல் நிலையத்தில், திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு கிறிஸ்தவ தேவாலய பங்குத் தந்தை ராபின்சன் உட்பட 15 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனிடையே நேற்று முன்தினம் (ஜன.24) கல்குளம் தாசில்தார் தலைமையில் போலீசார், சேவியர் குமார் உடலை நீதிமன்ற ஆணைபடி மைலோடு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உட்படக் கொலையாளிகளைக் கைது செய்வதில் காவல்துறை தாமதம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி இன்று (ஜன.26) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் "கொலை நடந்து இத்தனை நாட்களாகியும் அரசு மெத்தனமாக உள்ளது. தேவாலயத்தில் அழைத்து பேச்சுவார்த்தை என கூறி அடித்து கொலை செய்யப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது, சரண் அடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் இதுவரை விசாரிக்க வில்லை, காவல்துறை ஏன் இன்னும் கொலை சம்பந்தமாக அறிக்கை வெளியிடவில்லை, பேசுவதற்கு எல்லாம் குண்டாஸ் போடும் அரசு கொலைக்கு என்ன முறையில் வழக்குப் பதிவு செய்வார்கள், குற்றவாளி தலைமறைவாகிவிட்டார் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு திமுக துணை போகிறதா என்ற கேள்விக்கு பதில்ளத்த அவர், "இந்த வழக்கில் கொலைக்குத் துணை போகிறார்கள் என்று கூறுவதை விட குற்றவாளிகளே திமுக தான்" என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, "தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால் ஒழுங்காக இல்லை, சட்டம் ஒழுங்காக இருந்திருந்தால் இது போன்ற கொலைகள் நடந்திருக்காது. எத்தனை பேரை வெட்டி கொன்றாலும் அவர்களைக் காப்பாற்ற ஆட்சி, அதிகாரம் இருக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் மறக்கலாம் ஆனால் நான் மறக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, சேவியர் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த சேவியர் குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியினை சீமான் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சேவியர் குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று அவரது கல்லறையில் நாம் தமிழர் கட்சிக் கொடி போர்த்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்" - நடிகர் மன்சூர் அலிகான்!

ABOUT THE AUTHOR

...view details