தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (சனிக்கிழமை) தஞ்சையில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய சீமான், "இந்த நிலத்தை நஞ்சாக்கிய, நாசமாக்கிய மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததையெல்லாம் பெருமையாகப் பேசுகிறார்கள்.
காவிரிப் படுகையில் மீத்தேன் இருக்கிறது என்றால், கங்கைப் படுகையிலும் மீத்தேன் இருக்கிறது அல்லவா? அதை ஏன் அவர்கள் எடுக்கவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அவர்கள் நிலம் முக்கியம். தமிழகத்தில் நிலம் களவு போவதையோ, மணல் களவு போவதையோ, மலை நொறுக்கப்பட்டு மண்ணாகிப் போவதையோ பற்றி, அவர்களுக்கு கவலை இல்லை. வளர்ச்சி, வளர்ச்சி என்றார்கள். ஆனால், வளரும் நாடு பட்டியலில் இந்தியாவின் பெயர் கூட இல்லை.
காவிரி நம் உரிமை; அது கர்நாடகாவிற்கு மட்டும் சொந்தமல்ல. அவரவர் நீர்வளம் அவரவருக்கு என்று கூறுகிறார்கள். அப்படி நம்முடைய நிலத்தின் வளம் நமக்கே என்றிருந்தால், எப்படி நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு இருக்கும் என்று ஒவ்வொரு குடிமகனும் எண்ணிப் பார்க்க வேண்டும். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழர்களுக்கு தர முடியாது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க நாங்கள் என்ன முட்டாளா? என்று கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்கிறார்கள்.
காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு குறித்து, இங்கே வாக்குக் கேட்டு வரும் காங்கிரஸ் கட்சி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர்களின் கருத்து என்ன? ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று சொல்கின்ற கட்சிக்கு, அங்கு போய் ஓட்டுக் கேட்ட பெருமகன்தான் நம் ஐயா மு.க.ஸ்டாலின். அவர் மானமிக்க தலைவன் மற்றும் இந்த மண்ணை நேசிக்கின்ற தலைவனாக இருந்தால், ஒரு சொட்டு தண்ணீர் தராத உனக்கு தேர்தலில் என்னோடு கூட்டும் இல்லை, சீட்டும் இல்லை என்று முடிவெடுத்திருக்க வேண்டுமா? இல்லையா?
காவிரியில் தண்ணீர் தர வேண்டும் என்று பாஜக சொன்னால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஜெயிக்கும். அதே காங்கிரஸ் சொன்னால், பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக தமிழ் தேசிய இன மக்களின் உரிமையைப் பறிகொடுக்க தயாராகிவிட்டார்கள். நிலத்தை நாசமாக்கிய சீமை கருவேல மரத்தைக்கூட வெட்டி அடுப்பு எரிக்கலாம். இவர்களை உள்ளே விட்டீர்கள் என்றால், இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிடுவார்கள்.
24 மணி நேரமும் சாதி, மதம், சாமி எனப் பேசுவார்கள். நீங்கள் சாதி, மதமாக நிற்கப் போகிறீர்களா? அல்லது மொழி, இனமாக நிற்கப் போகிறீர்களா?" என ஆவேசமாகப் பேசினார். இந்தப் பிரச்சாரத்தில் வேட்பாளர் ஹிமாயூன் கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தமிழர்களை புறந்தள்ளும் பாஜகவுக்கு தேர்தலில் தக்கப்பாடம் புகட்டப்படும்: செல்வப்பெருந்தகை கருத்து - Lok Sabha Election 2024