தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக அரசு வடமாவட்டங்களை சுடுகாடாக மாற்றியுள்ளது"- கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சீமான் ஆவேசம்! - seeman - SEEMAN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையை சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடிப்பதை சித்தரிக்கும் கோப்புப்படம், சீமான்
கள்ளச்சாராயம் குடிப்பதை சித்தரிக்கும் கோப்புப்படம், சீமான் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 5:18 PM IST

சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. தற்போது இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆற்றமுடியாத மனத்துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், கணவரை இழந்து தவிக்கும் மனைவிகள் என வாசலில் இறந்த உடல்களை வைத்து அடுத்தடுத்த வீடுகளில் கேட்கும் மரண ஓலங்கள் நெஞ்சைப் பிளக்கின்றது. குடும்பப் பாரத்தைச் சுமக்க நேர்ந்துள்ள பெண்களின் அழுகுரல்கள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. கள்ளச்சாராயத்தைத் தடுக்கத்தவறி திமுக அரசு வடமாவட்டங்களைச் சுடுகாடாக மாற்றியுள்ளது.

‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் அளவிற்கு மிகமோசமான சூழல் நிலவும் நிலையில், உயிரிழப்புகளுக்குக் கள்ளச்சாராயம் காரணம் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது எப்படி? திமுக அரசு சிறிதும் மனச்சான்று இன்றி, வெவ்வேறு உடல் உபாதைகளாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்தது என்றுகூறி, கள்ளச்சாராய மரணங்களை மூடி மறைக்க முயன்றது வெட்கக்கேடானது. கள்ளச்சாராயம் அருந்தி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள கொடுமைகளும் அரங்கேறியுள்ள நிலையில் அதிகாரிகளுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ கள்ளச்சாராயம் விற்பனை குறித்த குறைந்தபட்ச அறிதல் கூட இல்லை என்பது திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு மோசமாக இயங்குகிறது என்பதைக் காட்டுகிறது.

கள்ளச்சாராய விற்பனையின் முக்கியக் குற்றவாளியான சின்னதுரை மீது இதுவரை 70க்கும் மேல் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்க அவர் அனுமதிக்கப்பட்டது எப்படி? அப்பகுதியில் காவல்துறையால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1000 லிட்டர் அளவிற்கு கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்ட நிலையில், இத்தனை நாட்கள் தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது? தொழிற்போட்டி காரணமாக கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போட்டி போட்டு விற்கப்படும் அளவிற்கு கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்தது எப்படி? அதனை அனுமதித்தது யார்? காவல்துறையின் அனுமதியுடன்தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகப் பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டிற்கு திமுக அரசின் பதில் என்ன? என்று சீமான் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டும்; இனியும் இதுபோன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று சீமான் தமத அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேரில் சென்று ஆறுதல்: இதனிடையே,விழுப்புரம் மக்களவை உறுப்பினர் டாக்டர் ரவிக்குமார் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "க்ளளச்சாராயம் குடித்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தேன். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தேன். தோழர்கள் குணவழகன், பொன்னிவளவன், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்" என்று ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் குவியும் எதிர்க்கட்சி தலைவர்கள்.. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 1 லட்சம் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details