மதுரை: தென்மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பும், மதுரை காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விதைத் திருவிழா (Seed festival) 2024 நிகழ்வு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ரூசா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதுகுறித்து விதைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் விவசாயி அன்னவயல் காளிமுத்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறும்போதும், "விதையை விதைத்திடு.. விதையைக் காத்திடு.. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை, என்பதற்கேற்ப விதைக்கான ஒன்றுபட்ட முழக்கம் இந்த ஆடி மாதத்தில்தான் நிகழும். குறிப்பாக இந்த மாதத்தில்தான் கல்யாணம், காதுகுத்து, கிடாவெட்டு உள்ளிட்ட சடங்குகள் எவையும் இருக்காது.
காரணம், ஆண்டின் 365 நாட்களில் இந்தக் குறிப்பிட்ட 30 நாட்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மதுரையில் இந்த விதைத் திருவிழா 5ஆவது முறையாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விதைத் திருவிழாவின்போது, உள்ளூர் மக்களுக்கான விதைகளை உறுதி செய்திருந்தோம். அதன் அடிப்படையில் விதை வங்கி ஒன்றை உருவாக்கினோம். அதன் தொடர்ச்சியாக விதைகளைப் பாதுகாப்பதற்கான தொடர் முயற்சியில் ஏன் இறங்கக்கூடாது என்ற கேள்வியின் விளைவே இந்த கண்காட்சி.
தனித்தன்மை வாய்ந்த கத்திரிக்காய்:ஒவ்வொரு 20 கி.மீ.க்கு இடையிலுள்ள பகுதிகளில் வாழும் விவசாயப் பெருமக்கள் தங்கள் பகுதியில் கத்திரிக்காய் உள்ளிட்ட தாவரங்களின் விதைகளைப் பாரம்பரியமாகவே பாதுகாத்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் எட்டுநாழி, காரைக்கேணி உள்ளிட்ட கிராமங்களில் கிடைக்கும் கத்திரிக்காய்கள் தனித்துவம் ிக்கவை. இவ்விரண்டு கிராமங்களின் கத்திரிக்காய்களுமே 20 கி.மீ. வேறுபாட்டில் தனித்தனி தன்மைகளைக் கொண்டதாகத் திகழ்கின்றன.
ஒரு விதையும் மற்றொரு விதையும் கலந்து விடக்கூடாது என்பதில் நமது முன்னோர்கள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது விதை வணிகம் என்பது மேலோங்கிவிட்டது என்பதால் எந்தவிதையையும் கொடுத்து விவசாயிகளிடம் விளைய வைத்துவிடலாம் என்ற தவறான போக்கு உருவாகியுள்ளது. விவசாயிகளை மேலும் அடிமைப்படுத்துவதாகவும், அவர்களின் மீதான சுமையை ஏற்றுவதாகவும் உள்ளது.