சேலம்: பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக குழு தலைவராக இருப்பவர் ஜெகநாதன். இவர் பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் ஆத்தூர் நோக்கி புறப்பட்டார்.
அப்போது அவரின் காரின் பின்னால் பல கார்கள் அணிவகுத்துச் சென்றன. பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகநாதனும் காரில் சென்றார். அவர் சென்ற வாகனம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு சொந்தமான அரசு வாகனமாகும்.
காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் நெடுஞ்சாலையில் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி காவலாளி தங்கவேல் என்பவர் மீது ஜெகநாதன் கார் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காவலாளி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து காரிப்பட்டி போலீசார் ஜெகநாதனின் கார் டிரைவர் அண்ணாதுரை மீது வழக்கு பதிவு செய்தனர். அரசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:'அமித் ஷாவுக்கு கண்டனம்' - திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
இந்த நிலையில், கலெக்டரின் அனுமதி இல்லாமல் அரசு காரை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிக்கு சென்ற காரணத்தினால் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில், விபத்து நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கார் செல்கிறது. அதற்குப் பின்னால் நான்கு கான்வாய் கார்கள் செல்லும் நிலையில், சற்று இடைவெளி விட்டு ஜெகநாதன் செல்லும் காரும் வேகமாக செல்கிறது.
மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார் சாலையை கடக்கும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக இருக்கிறது. விபத்து நடந்ததும் அந்த இடத்திற்கு பொதுமக்கள் பதட்டத்துடன் ஓடிவரும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், ''இந்த விபத்து குறித்து பனமரத்துப்பட்டி பி.டி.ஓ. விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதன் மீது சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நடவடிக்கை எடுப்பார் ' என்று தெரிவித்தனர்.