தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தமிழ்நாடு சிறந்து விளங்குவதை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” - எஸ்டிபிஐ தெஹ்லான் பாகவி காட்டம்!! - SDPI ON WAQF LAW

மத்திய பாஜக அரசு மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து தமிழ்நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல நினைக்கிறது என எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி கூறியுள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2025, 12:42 PM IST

தேனி:பாஜக ஆளுகின்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோக்கி உள்ளது எனவும், கல்வியில் சிறந்திருப்பதைத் தடுக்க மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து திணிக்க முயற்சிக்கிறது எனவும் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வக்பு திருத்தச் சட்ட மசோதா 2024-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் சார்பாக, வக்பு உரிமை மீட்பு மாநாடு நேற்று (பிப்.22) தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் நடைபெற்றது.

உரிமையைப் பறிக்க பல்வேறு நடவடிக்கை:

இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் இருக்கும் முக்கிய பிரச்னைகளை தவிர்த்து, வேறு தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு, விமர்ச்சனங்களை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதில் முக்கியமான சிறுபான்மையினர்களின் உரிமையைப் பறிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

வக்பு திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளது. அதுமட்டுமின்றி ஜனநாயகம் மற்றும் சமத்துவத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. இந்த திருத்தங்கள் மூலம் சிறுபான்மையினரை நசுக்க நினைக்கிறார்கள். எனவே, மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளும் இந்த வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்த வேண்டும்.

இதையும் படிங்க: “நிதி தராமல் தன்மானத்தின் மீது கை வைக்கிறார்கள்” - அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாடு அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்:

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது. அதைப் பின்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. அதனால், கல்வியில் சிறந்திருப்பதைத் தடுக்க மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து திணிக்க முயற்சிக்கிறது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோக்கி உள்ளது.

இதற்கு தமிழக அரசு அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியச் சுதந்திரம் பெற்றபோது ஈடுபட்ட போராட்டங்களைப் போல், போராட்டத்தில் இறங்க வேண்டும்.

இந்தி திணிப்பிற்கு எதிராகத் தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதுவும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து மட்டும் போராட்டம் நடத்தக் கூடாது, மதச்சார்பற்ற தன்மையைப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடத்த வேண்டும். பாஜக தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து பயம் கொள்கின்றனர். அதனால், வளர்ச்சி திட்டங்களைத் தடுக்க நினைக்கின்றனர். இதுகுறித்து ஒரு நல்ல முடிவைத் தமிழ்நாடு அரசு விரைவாக எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details