திருவண்ணாமலை:பட்டதாரி ஆசிரியை நியமனத்துக்கு கூகுள் பே மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் சாரோன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஏஎல்சி மேல்நிலை பள்ளியில் கணித பாட பட்டதாரி ஆசிரியராக கவிதா என்பவர் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால், அவரது நியமனத்திற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில், நீதிமன்றத்திற்கு சென்று நியமன உத்தரவு பெற்று இருக்கிறார். அதன் பிறகு கவிதாவின் நியமனத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும் ஆசிரியை கவிதாவின் நியமனத்திற்கு லஞ்சம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, ஒன்றரை லட்சம் ரூபாயை பள்ளி துணை ஆய்வாளர் (Deputy Inspector of Schools) என். செந்தில்குமார் கூகுள் பே மூலமாக கவிதாவிடம் இருந்து பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த தொகை செந்தில்குமாரின் மனைவி புஷ்பவள்ளியின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியை கவிதா திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமார் கூகுள் பே மூலமாக கவிதாவிடம் இருந்து பணம் பெற்றது தெரிய வந்தது.