திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பெண் கணினி ஆசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி, சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்கள் கேட்டை பூட்டிவிட்டு பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஓர் நடுநிலைப் பள்ளியில் பனிரெண்டு ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்தப் பள்ளியில் தற்காலிக பணி அடிப்படையில் பணிபுரியும் பெண் கணினி ஆசிரியருக்குக் கடந்த 14-ஆம் தேதி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:உடற்கல்வி, இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி.. சமூகத்துக்கு பாடமாக திகழும் அரசுப் பள்ளி ஆசிரியர்!
இந்த விவகாரம் தொடர்பாகப் பெண் கணினி ஆசிரியை தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கவே அவர்கள் மறுநாள் காலையில், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலர் அசோக்குமார் மற்றும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமானத்தில் ஈடுபட்டு, பெண் ஆசிரியையிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் பெற்று, விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று(அக்.18) அன்று சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், "தலைமை ஆசிரியர் இதுபோன்று செய்திருக்க மாட்டார் என்றும் அவரை மீண்டும் இந்த பள்ளியில் பணியமர்த்த வேண்டும்" என்றுக் கூறி பள்ளியில் கேட்டை பூட்டிவிட்டு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் மீது துறை சார்ந்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu) செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்