சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் திட்டங்களைச் செயல்படுத்தவும், அவர்களுக்கான விபரங்களைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாகும். அதனோடு இன்றி ஒவ்வொரு தனிமனிதனின் விபரமும் ஆதார் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.
இந்நிலையில் பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகளுக்கு ஆதார் பெறுவதற்கு சேவை மையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் எல்காட் (ELCOT) நிறுவனம் மூலம் வரும் 23ஆம் தேதி முதல் பள்ளிகளிலேயே மாணவர்கள் ஆதார் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், “பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பை ELCOTஇன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிரந்தர சேர்க்கை மையத்திற்குப் பயணிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 23ஆம் தேதி கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் உங்கள் மாவட்டத்திலும் இதைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.