சென்னை:தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றனர். அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை 149இன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வினை எழுதி அதில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அரசாணை 149இன் படி முதல் முறையாகப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு, உபரி ஆசிரியர்கள் கண்டறிந்து பணியிட மாறுதல், காலிப்பணியிடங்களைக் கணக்கிட்டு அரசின் ஒப்புதல் பெறுதல் போன்றவை ஒரு குறிப்பிட்ட கால அளவில் நடைபெறாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், கலந்தாய்வு, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் ஆகியவற்றுக்குக் கால நிர்ணயம் செய்து வெளியிட்டுள்ள அரசாணையில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை பட்டதாரி பணியிடங்களை நிரப்புதல் மற்றும் கலந்தாய்விற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து பாடப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் செய்வதற்குக் கால அட்டவணை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ஆம் தேதிக்குள் பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களைக் கண்டறிந்து கணக்கீடு செய்ய வேண்டும்.
மே மாதம் 31ஆம் தேதிக்குள் உபரி பணியிடம் எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களைத் தேவையுள்ள பள்ளிகளுக்குப் பணி நிரவல் செய்ய வேண்டும். ஜூன் 30ஆம் தேதிக்குள் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்தல் வேண்டும். ஜூலை மாதம் 1ஆம் தேதிக்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட விபரங்களைக் கணக்கிட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசிடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை ஜூலை 15ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். அரசுக்குச் சமர்ப்பிக்கப்படும் கருத்துருக்கள் மீது செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிடப்பட வேண்டும்.