சென்னை:பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு மே 13 முதல் 17ஆம் தேதி வரை, ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்:
- பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள், தங்களது EMIS - ID உள்நுழைவின் மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்திடல் வேண்டும்.
- ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து, ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணையவழியாக சமர்ப்பித்திடல் வேண்டும்.
- பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து, ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணையவழியாக சமர்ப்பித்திடல் வேண்டும்.
- ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நிலுவையின்றி உடனடியாக வட்டாரக் கல்வி அலுவலர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும்.
- அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். எனவே, எவ்வித விடுதலுமின்றி மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்பளித்திட வேண்டும்.