சென்னை:கடந்த காலங்களில் அரசுப் பள்ளியில் ஜூன் மாதம் திறக்கப்பட்ட பின்னரே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வந்தன. இதனால் இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேல் நடைபெற்றுள்ளது.
இதில் பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு முயற்சி மேற்கொண்டு தங்கள் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்துள்ளனர். பல இடங்களில் அரசுப் பள்ளிகளில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முறையாக மாணவர் சேர்க்கையை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சரியாக மேற்கொள்ளவில்லை என்ற தகவலும் பள்ளிக்கல்வித்துறைக்கு கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கிடவும், அதேபோல சரியாக மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:ஒரு இடத்திற்கு 120 மாணவர்கள் போட்டி.. சென்னை மாநிலக் கல்லூரி முதல்வரின் விளக்கம் என்ன? - Chennai Presidency College