சென்னை:அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்பட்டு, அதில் விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் ஆகியவற்றை பள்ளிகளில் சத்துணவில் பயன்படுத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். இந்த வழிகாட்டுதல்களை பள்ளித் தலைமையாசிரியர் தவறாமல் பின்பற்றிதேவையான நடவடிக்கை மேற்காெள்ள வேண்டும்.
- மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே நடத்தப்பட வேண்டும்.
- தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை முழுமையாக உள்ளதை உறுதி செய்ய ஆசிரியர்கள் முழுமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- பள்ளி செல்லும் வயதுடைய அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
- 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 9ஆம் வகுப்பு சேர்வதை உறுதி செய்திட வேண்டும்.
- இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கான 2024-25ஆம் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.
- ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்த நேரத்திற்கு வழங்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஆண்டும் இந்தச் செயல்பாடுகளில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்தல் வேண்டும்.
ஹேக்கிங் (hacking) தொடர்பான பயிற்சி:மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பமான எந்திரனியலைக் கற்றுக் கொள்ள எந்திரனியல் மன்றங்கள்(Mechanical forums) பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், இணைய பாதுகாப்பு மற்றும் எத்திக்கல் ஹேக்கிங்(Ethical Hacking)தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
காய்கறித் தோட்டம் (Vegetable garden):அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்பட்டு, அதில் விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் பள்ளிகளில் சத்துணவில் பயன்படுத்தப்பட வேண்டும். இத்திட்டம் சுற்றுச்சூழல் மன்றம் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்.
கல்வி இணைச் செயல்பாடுகள் (Co curricular Activities):மன்ற செயல்பாடுகளைப் பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக மாதிரி கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தங்கள் தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் கடைசி இரு பாடவேளைகளில் இச்செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.