சென்னை:யூடியூபர் சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து கடந்த 2017 பிப்ரவரி 24ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுவித்தது. தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்க சிபிசிஐடி முடிவு செய்தது. கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் டிவிஏசி அலுவலகத்தின் ரகசியப் பிரிவில் சிறப்பு உதவியாளராக பணியாற்றிய போது ஆவணங்களை திருடியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
டிவிஏசியின் சட்ட ஆலோசகராக என்.விஜயராஜன் பணியாற்றியபோது 2008-ல் சட்ட ஆலோசகர் தனது கணினியில் ரகசிய கோப்புகளை வைத்திருந்ததாகவும், அதை சவுக்கு சங்கர் ‘சுஜாதா’ என்ற பென்டிரைவிற்கு மாற்றினார் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
அந்த கோப்பில் இருந்த ஆவணங்களில் இருந்து அப்போதைய டிவிஏசி இயக்குநர் எஸ்.கே.உபாத்யாய் மற்றும் அப்போதைய தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி இடையேயான ரகசிய உரையாடலின் விவரங்கள் நாளிதழில் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இதையடுத்து, உள்துறைச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறை சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், சட்ட ஆலோசகரின் கணினியை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்த முடியாது என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, சவுக்கு சங்கர் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்து அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்ய நீதிபதி நிர்மல் குமார் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து மேல்முறையீட்டை ஏற்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மக்களவை தேர்தல் 2024 சாதனை படைத்த திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்!