கோயம்புத்தூர்:பெண் காவலர்கள் குறித்தும், காவல்துறை அதிகாரிகள் குறித்தும் அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறை பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பெண் போலீசார் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசார் தரப்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், ஒருநாள் மட்டும் காவல்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண் போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு காரணம், அதிகாரிகள் குறித்து தவறான தகவல்கள் தந்தது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சவுக்கு சங்கர் சார்பில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிந்துள்ள வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டு, கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதன் மீதான விசாரணையை வரும் மே 20ஆம் தேதிக்கு நீதிபதி சரவணபாபு ஒத்திவைத்தார்.
இதனிடையே, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்காக அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் திருச்சி போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், பெண் போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது மதிய உணவிற்குச் சென்றபோது பாதுகாப்பு பணிக்காக உடன் வந்த பெண் போலீசார் தன்னை தாக்கி, அதனை வீடியோ எடுத்துள்ளதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த நேதாஜி இளைஞர் பேரவை அமைப்பின் நிர்வாகியும், வழக்கறிஞருமான முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில், கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் (RED PIX) யூடியூப் சேனலின் இணை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று RED PIX யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் நேதாஜி பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்து புகாரில் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதில் கலகம் செய்யத் தூண்டி விடுதல், சாதி, மதம், இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் அறிக்கை அல்லது வதந்தியை வெளியிடுதல் உட்பட 5 பிரிவுகளில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த வாரம் சவுக்கு சங்கர் தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றம் அழைத்து வரும்போது, திமுக மகளிர் அணியினர் நீதிமன்றம் முன்பு சவுக்கு சங்கரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டு வரும் நிலையில், சென்னையில் இருந்து கோவை வந்த சவுக்கு சங்கரின் தாயார் கமலம், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணனுடன் சென்று, செவ்வாய்க்கிழமை இரவு கோவை மாநகர காவல்துறையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து கை முறிவு ஏற்பட்டுள்ள தனது மகன் சங்கருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் உரிய பாதுகாப்பும் வழங்கும்படி மனு அளித்துள்ளார். மேலும், கோவை மத்திய சிறைக்கும் சென்ற அவரது தாயார் கமலம், அங்கும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து மகனுக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பெண் காவலரிடம் மொபைல் நம்பர் கேட்டாரா சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் காரசார வாதம்! - Savukku Shankar Asked Mob No