கரூர்: கரூர் மாவட்டம், சவுக்கு இணையதளத்தில் பணியாற்றிய விக்னேஷ் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக கரூர் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் புதிதாக சவுக்கு சங்கரின் பெயர் சேர்க்கப்பட்டதால், இன்று (ஜூலை 9) கரூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கறிஞர் கரிகாலன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதுகுறித்து சவுக்கு சங்கரின் கரூர் வழக்கு நடத்தும் வழக்கறிஞர் கரிகாலன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து சவுக்கு சங்கர் ஊடகங்களிலும், யூடியூப் சேனல்களிலும் பேட்டியளித்து வந்தார். இதனால் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்.
மேலும், இன்று கரூர் நகர காவல் நிலையத்தில் பொய் வழக்கைப் பதிவு செய்து கரூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை அலைக்கழிக்கும் நோக்கில் காவல்துறை புதிதாக ஒரு வழக்கில் சேர்த்துள்ளது. இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில், 7 நாட்கள் விசாரணைக்கு கரூர் நகர காவல்துறை கோரி இருந்தது. ஆனால், கரூர் நீதிமன்றம் 4 நாட்களுக்கு மட்டும் விசாரணையில் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
சவுக்கு சங்கர் சில தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க என்னிடம் கேட்டுக் கொண்டார். அதில், புழல் சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், அவரைச் சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.
புழல் சிறை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி கனகராஜ் என்பவர் சவுக்கு சங்கரை தனிப்பட்ட முறையில் சித்திரவதைக்குள்ளாக்கி வருகிறார். சவுக்கு சங்கருக்கு விபத்து ஒன்றில் விரல் காயம் ஏற்பட்டு சிறையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார் என்பதற்காக சவுக்கு சங்கருக்கு மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற முடியவில்லை. சவுக்கு சங்கர் நீரழிவு நோயாளி என்று தெரிந்தும், சப்பாத்தி போன்று தனியாக உணவு ஏதும் சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதில்லை. சிறை நிர்வாகம் சார்பில் தனியாக படிப்பதற்கு நாளிதழ்கள் வழங்கப்படுவதில்லை. சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் சில நாட்களுக்கு முன்பு வாங்கிக் கொடுத்த புத்தகங்கள் இன்று வரை சிறை நிர்வாகம் வழங்கவில்லை.
மேலும், புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல்துறை தனி மரியாதை அளித்து வருவதாகவும், ஆறு மணிக்கு மேல் சிறைச்சாலைகளில் கைதிகள் சிறைக்குள் அடைக்கப்பட்ட பிறகும் செந்தில் பாலாஜிக்கு மட்டும் நடைபயிற்சி மேற்கொள்ள சிறைக் காவலர்கள் அனுமதி அளிக்கின்றனர்.
இது தவிர தனியாக டிடிஹெச் அமைத்து தொலைக்காட்சி ஒன்றும் வெளியே பேசுவதற்கு தொலைபேசி ஒன்றும் செந்தில் பாலாஜிக்கு சிறை நிர்வாகம் சலுகை அளித்திருப்பதாக” வழக்கறிஞர் கரிகாலன் தெரிவித்தார். இந்த வழக்கை சட்ட ரீதியாக சவுக்கு சங்கர் சந்திப்பார். நாளை ஜாமீன் மனுத்தாக்கல் செய்து, சவுக்கு சங்கருக்காக வாதாட இருப்பதாக தெரிவித்தார். காவல் துறையின் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக சவுக்கு சங்கர் என்னிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் கரிகாலன் கூறினார்.
சவுக்கு சங்கருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், சவுக்கு சங்கரை காண்பதற்காக குவிந்தனர்.
இதையும் படிங்க:நீலகிரி மனநல காப்பகத்தில் 20 பேர் இறப்பு? அதிகாரிகள் நேரில் விசாரணை! - nilgiri mental health care centre