சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழகத்தில் தற்போது வரை 4.36 கோடி பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளது. 13ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
புதிய வாக்காளர்களுக்கு இந்த முறை 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இன்னும் 6000 அட்டைகள் மட்டுமே வழங்க வேண்டி உள்ளது. விரைவில் இதுவும் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது வரை வருமானத் துறையினர் ரூ.74 கோடி பறிமுதல் செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் புத்தகத்தில் உள்ள சின்னத்தின் வரைபடத்தின் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், உதவி செலவின பார்வையாளர் அனுப்பி வைத்த புகார் இதுவரை எங்களிடம் வரவில்லை. செய்தித்தாள்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேரும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருக்கும்.
தபால் வாக்குகள் அளிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்சியில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த தபால் வாக்கு மையம் அமைக்கப்படும். அங்கிருந்து தபால் வாக்குகள் பல்வேறு மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்படும்.